பிரியாணியை பிடிக்காதவர்கள் மிக சொற்பமானவர்களே இருப்பார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் சிக்கன் பிரியாணி அல்லது மட்டன் பிரியாணி போன்ற அசைவ பிரியாணிகளை விரும்புவர்களின் எண்ணிக்கையே அதிகம். இருப்பினும் இதை பொய்யாக்கும் வகையில் நாம் இன்று இங்கு காண இருக்கும் அற்புதமான வெஜிடபிள் தம் பிரியாணி இருக்கும். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெஜிடபிள் தம் பிரியாணியின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பெரும்பாலும் நாம் வெஜிடபிள் பிரியாணி செய்யும் பொழுது தம் பிரியாணி முறையை தவிர்த்து விடுவோம். அதற்கு தம் பிரியாணி செய்ய கூடுதல் நேரம் மற்றும் செய்முறைகள் எடுத்துக் கொள்ளும் என்கின்ற பரவலாக இருக்கும் தவறான புரிதலே காரணம். வெஜிடபிள் தம் பிரியாணியை நாம் எளிதாக எந்த வித சிரமமும் இன்றி செய்து விடலாம். அது மட்டும் இன்றி இதை நாம் லேயர்களாக வேக வைப்பதினால் இவை சாதா பிரியாணிகளை விட மிகுந்த சுவையாகவும் மற்றும் மணமாகவும் இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
வெஜிடபிள் தம் பிரியாணி செய்ய நாம் பயன்படுத்தும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பிரியாணி மசாலா, மற்றும் பாசுமதி அரிசியுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக அற்புதமாக இருக்கும்.
சில குறிப்புகள்:
உருளைக்கிழங்கை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டால் உருளைக்கிழங்கு நிறம் மாறாமல் இருக்கும்.
காலிஃப்ளவரை நறுக்கியவுடன் கொதிக்கும் தண்ணீரில் பத்து நிமிடம் போட்டால் அதில் ஏதேனும் புழுக்கள் இருந்தால் அது மடிந்து விடும்.
பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.
இவ் உணவின் வரலாறு:
பிரியாணி பெரிசியன் சாம்ராஜ்யத்தில் (சமகால ஈரான்) உதயமானதாக நம்பப்படுகிறது. இவை முகலாயர் படையெடுப்பின்போது இந்திய சமையல் முறைக்குள் நுழைந்ததாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சமகாலத்தில் உள்ள பெரும்பாலான பிரியாணிகள் 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முகலாயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது உதயமானதாக கூறப்படுகிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
வெஜிடபிள் தம் பிரியாணி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 40 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.
வெஜிடபிள் தம் பிரியாணியை முழுமையாக சுமார் 65 நிமிடத்தில் இருந்து 70 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
வெஜிடபிள் தம் பிரியாணியை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ரெண்டு நாள் வரை நாம் ஃபிரிட்ஜில் வைத்து சுட வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
- காலிஃப்ளவர் தம் பிரியாணி
- வெஜிடபிள் பிரியாணி
- மஷ்ரூம் பிரியாணி
- சிக்கன் பிரியாணி
- மட்டன் பிரியாணி
- ஃபிஷ் பிரியாணி
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
வெஜிடபிள் தம் பிரியாணியில் சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.
நாம் இதில் சேர்க்கும் பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K, மற்றும் A உள்ளது.
இதில் நாம் பயன்படுத்தும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
நாம் இதில் உபயோகிக்கும் காலிஃப்ளவரில் நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் C, K, மற்றும் B6 உள்ளது.
இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெஜிடபிள் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்
- 1 cup பாசுமதி அரிசி
- 2 கேரட்
- 8 பீன்ஸ்
- 1 உருளைக்கிழங்கு
- 1/4 cup பச்சை பட்டாணி
- 1 cup காலிஃப்ளவர்
- 2 தக்காளி
- 2 1/2 வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 8 பல் பூண்டு
- 1 சிறு துண்டு இஞ்சி
- 1/2 cup தயிர்
- 1/4 tsp மஞ்சள் தூள்
- 2 tsp மிளகாய் தூள்
- 1 tsp மல்லி தூள்
- 2 tsp பிரியாணி மசாலா
- 15 tsp குங்குமப்பூ பால்
- 1/2 tsp எலுமிச்சை சாறு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு புதினா
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உறித்து, மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைக்காண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை சுமார் 90 சதவீதம் அளவிற்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்திலிருந்து அரை வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ஒரு மேஜைகரண்டி அளவு பிரியாணி மசாலா, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போடவும்.
- அடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் வெங்காயத்திலிருந்து ஒரு கை அளவு எடுத்து சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 20 நிமிடம் வரை ஊற விடவும்.
- இப்பொழுது சுமார் 15 மேஜைகரண்டி அளவு சுடவைத்த பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும்.
- 20 நிமிடத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் காய்கறி கலவைகளை பக்குவமாக போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
- ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் ஒரு மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும். (உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).
- 15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு கிளறி விட்டு அந்த காய்கறி கலவையிலிருந்து பாதியை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் காய்கறி கலவையை நன்கு சமம் செய்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியில் இருந்து பாதியை எடுத்து அதில் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் சாதம் உடைந்து விடாமல் பக்குவமாக சமம் செய்யவும்.
- பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய், நாம் தயார் செய்து வைத்திருக்கும் குங்குமப்பூ பாலில் இருந்து பாதி, ஒரு கை அளவு வறுத்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பிரியாணி மசாலாவை தூவி விடவும்.
- அதைத்தொடர்ந்து அதன் மேலே நாம் கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் காய்கறி கலவைகளை சேர்த்து அதை நன்கு பரப்பி விடவும்.
- அடுத்து அதன் மேலே மீதம் உள்ள பாசுமதி அரிசியை போட்டு அதை சமம் செய்து அதன் மேலே ஒரு மேஜைகரண்டி அளவு நெய், மீதமுள்ள குங்குமப்பூ பால், வறுத்து வைத்திருக்கும் வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பிரியாணி மசாலாவை தூவி விடவும்.
- பின்பு அதில் ஒரு மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
- 15 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
- பத்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து பிரியாணியை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் உடைந்து விடாமல் கிளறி விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
வெஜிடபிள் தம் பிரியாணி செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை பயன்படுத்தலாமா?
உங்களுக்கு சீரக சம்பா அரிசி விருப்பம் என்றால் தாராளமாக நீங்கள் சீரக சம்பா அரிசியை உபயோகித்து கொள்ளலாம்.
வெஜிடபிள் தம் பிரியாணியை இன்னும் காரமாக ஆக்குவது எப்படி?
உங்களுக்கு காரம் மிகவும் விருப்பம் என்றால் உங்கள் தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வெஜிடபிள் தம் பிரியாணிக்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?
நாம் வழக்கமாக பிரியாணிக்கு சைடிஷ் ஆக பயன்படுத்தும் வெங்காய ரைத்தா உடனே இவை நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கட்டாயம் சைடிஷ் வேண்டும் என்றால் பன்னீர் 65, பன்னீர் டிக்கா, மஷ்ரூம் மஞ்சூரியன், மஷ்ரூம் மசாலா போன்ற சைடிஷ்கள் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் லாலிபாப் போன்ற சைடிஷ்கள் அம்சமாக இருக்கும்.