சிற்றுண்டிகள் நம் அனைவரது வாழ்விலும் ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கின்றன. நாம் வழக்கமாக உணவு வேளைகளில் உண்ணும் உணவை தவறவிடுவோமே தவிர சிற்றுண்டிகளை பெரும்பாலும் கட்டாயம் தினமும் உண்டு விடுவோம். அவ்வளவு முக்கியமான இந்த சிற்றுண்டிகளில் வடை ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது. அவ்வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான ஸ்வீட் கார்ன் வடை.
இந்த வித்தியாசமான ஸ்வீட் கார்ன் வடையை பண்டிகைகளின் போது, நம் வீட்டில் இருப்பவர்களின் பிறந்தநாளின்போது, மற்றும் குடும்ப கெட்டுகெதரின் போது செய்து நாம் விருந்தினர்களை அசத்தலாம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்கும் ஒரு சுவாரசியமான வடையின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
வடை பெரும்பாலும் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சிற்றுண்டி இவை. பொதுவாக நாம் நம் குடும்பத்தினருக்கு வழக்கமாக செய்யப்படும் மெது வடை, மசால் வடை, மற்றும் கீரை வடை போன்ற வடைகளை தான் செய்து கொடுத்திருப்போம். ஒரு சேஞ்ச் ஆக நீங்கள் இந்த ஸ்வீட் கார்ன் வடையை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியமாக குட்டீஸ்களுக்கு இந்த ஸ்வீட் கார்ன் வடை நிச்சயம் மிகவும் பிடிக்கும்.
அதுமட்டுமின்றி நம்மில் பலர் வடைகளை பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்பதைதான் வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த ஸ்வீட் கார்ன் வடையை நாம் வீட்டிலேயே மிக எளிதாக எந்த ஒரு கடினமான செய்முறையும் இன்றி கடைகளில் கிடைப்பதை விட சுகாதாரமான முறையில் செய்து விடலாம்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
சோளம் மற்றும் கேரட்டின் இனிப்பு தன்மை குடை மிளகாயின் அருமையான சுவை அதனுடன் அரிசி மாவு தரும் மொறு மொறுப்பு இவையின் காம்பினேஷனே தனி தான். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்கு வெந்து ஏற்படுத்தும் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ஸ்வீட் கார்ன் வடையை நீங்கள் ஒரு முறை உண்டு விட்டால் இதனின் சுவை உங்கள் நாவிலேயே ஒட்டிவிடும். பின்பு இதை மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எண்ணாமல் இருப்பது சற்று கடினம் தான்.
சில குறிப்புகள்:
சோளத்தை அரைக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்காதீர்கள். ஏனென்றால் நாம் வடை செய்யும் மாவு சற்று கெட்டியாக இருந்தால்தான் வடையை தட்ட முடியும்.
வடையை தட்டுவதற்கு முன்னாடி நம் கைகளில் எண்ணெய்யை தேய்த்துக் கொண்டால் வடை தட்டும் போது மாவு கைகளில் ஒட்டாமல் வரும்.
வடை தட்டும் போது அனைத்து வடைகளும் ஒரே சைஸில் இருப்பதை உறுதி செய்யவும். அப்பொழுது தான் அனைத்து வடைகளும் ஒரே நேரத்தில் வெந்து நாம் எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.
வடையை பொரித்து எடுத்து டிஷ்யூ பேப்பரின் மீது வைத்தால், வடை சற்று எண்ணெய் அதிகமாக குடித்திருந்தால் அதை டிஸ்யூ பேப்பர் உறிந்து விடும்.
இவ் உணவின் வரலாறு:
வடை தமிழர்களின் ஆதிகால பாரம்பரியமான உணவு வகையாகும். 100 BCE சங்க இலக்கியங்களில் வடை குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பன்னிரண்டாம் நூற்றாண்டின் போது சோமேஸ்வரா 3 அம் மன்னர் கர்நாடகாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது அங்கே பிரபலமடைந்ததாக கூறப்படுகிறது. பிந்தைய காலகட்டங்களில் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இவை பிரபலமடைய தொடங்கி இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வடையை பலவிதமாக மக்கள் செய்து சுவைக்கின்றன. காலப்போக்கில் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களால் வடை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், மற்றும் மியான்மர் போன்ற பல நாடுகளின் உணவு முறையில் வடை ஒரு அங்கமாகி இருக்கிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
ஸ்வீட் கார்ன் வடை செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.
இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் பிடிக்கும்.
ஸ்வீட் கார்ன் வடையை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேருக்கு தாராளமாக பரிமாறலாம்.
இதை ஒருநாள் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடலாம். எனினும் வடையை மொறு மொறுப்பாக சாப்பிடுவதே தனி சுவை தான்.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
ஸ்வீட் கார்ன் வடை செய்வதற்கு நாம் பயன்படுத்தும் அரிசி மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து இருக்கிறது.
இதில் நாம் சேர்க்கும் கடலை மாவில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B இருக்கிறது.
இதில் நாம் சேர்க்கும் வேகவைத்த சோளத்தில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கொழுப்பு சத்து உள்ளது.
நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
நாம் சேர்க்கும் குடைமிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
ஸ்வீட் கார்ன் வடை
தேவையான பொருட்கள்
- 1 cup அரிசி மாவு
- 1/4 cup கடலை மாவு
- 2 முழு ஸ்வீட் கார்ன்
- 1 கேரட்
- 1 வெங்காயம்
- 1/2 குடை மிளகாய்
- 3 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1/4 tsp மஞ்சள் தூள்
- 2 tsp மிளகாய் தூள்
- 1 tsp மல்லி தூள்
- 1 tsp ஆம்சூர் தூள்
- 1 tsp சீரக தூள்
- 1 tsp கரம் மசாலா
- 1/4 tsp பெருங்காய தூள்
- 1 tsp உப்பு
- 1 சிறு துண்டு இஞ்சி
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- முதலில் சோளத்தை சுமார் 10 நிமிடம் வரை வேக வைத்து சோள விதைகளை தனியாக ஒரு bowl ல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து கேரட்டை துருவி, வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோள விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, மற்றும் இஞ்சியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ஆம்சூர் தூள், சீரக தூள், கரம் மசாலா, பெருங்காய தூள், மற்றும் உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை ஊற விடவும்.
- ஐந்து நிமிடம் கழித்து நம் கைகளில் எண்ணெய்யை தேய்த்து நாம் செய்து வைத்திருக்கும் கலவையிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து வடைகளை தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளலாம்.
- இப்பொழுது ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு அதை நன்கு சூடாக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடையை கவனமாக பொறுமையாக ஒன்று ஒன்றாக போடவும்.
- வடை சற்று வந்ததும் அதை திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வடை நன்கு பொன்னிறம் ஆனதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து
- உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
ஸ்வீட் கார்ன் வடைக்கு எந்த சட்னி உகந்ததாக இருக்கும்?
தேங்காய் சட்னி, புதினா சட்னி, மற்றும் வெங்காய சட்னி இவை அனைத்துமே ஸ்வீட் கார்ன் வடையை தொட்டு உண்ண கச்சிதமாக இருக்கும்.
ஸ்வீட் கார்ன் வடை செய்வதற்கான மாவை முந்தைய நாள் இரவே தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாமா?
இல்லை. ஸ்வீட் கார்ன் வடையை செய்யும் நாளன்றே மாவை தயார் செய்வது நல்லது.
ஸ்வீட் கார்ன் வடையில் வேறு ஏதும் காய்கறிகளை நாம் சேர்த்துக் கொள்ளலாமா?
தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் இதனின் சுவையை மேலும் கூட்டும்.
ஸ்வீட் கார்ன் வடையை ஏர் ஃப்ரை செய்யலாமா?
இல்லை. டீப் ஃப்ரை செய்வதே நல்லது. அப்பொழுதுதான் வடை நன்கு உள்ளே வெந்து வெளியே மொறு மொறுப்பாக வரும்.