தயிர் சேமியா தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக தயிர் சேமியா மூன்று முறையில் மக்கள் செய்து சுவைக்கிறார்கள். வெறுமனே சேமியாவை வேக வைத்து அதில் தயிரை ஊற்றி கலந்து விடுவது, வேக வைத்த சேமியாவில் தயிரை ஊற்றி தாளித்து ஊற்றுவது, மற்றும் தாளித்து ஊற்றிய தயிர் சேமியாவில் பழங்களை சேர்த்து செய்வது. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்யப்படும் தயிர் சேமியாவை தான்.
பொதுவாக பெரும்பாலான விருந்துகளில் கடைசியாக தயிர் சாதம் பரிமாறுவதை தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. அவ்வகையில் நாம் நம் வீட்டில் நடக்கும் விருந்துகளின் போது தயிர் சாதத்திற்கு பதிலாக இந்த ஜில்லென்று இருக்கும் தயிர் சேமியாவை பரிமாறி நம் விருந்தினர்களை அசத்தலாம்.
தயிர் சேமியாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே எந்த ஒரு சிரமமுமின்றி வெகு எளிதாக குறைந்த நேரத்திலேயே சுலபமாக செய்து விடலாம். அது மட்டுமின்றி இதில் நாம் பால், மாதுளை விதைகள், முந்திரி பருப்பு, மற்றும் உலர் திராட்சையை சேர்த்து செய்வதால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பாலை குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அதை இவ்வாறு சேமியாவில் ஊற்றி கொடுத்தாள் அதை விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே தயிர் சேமியா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தயிர் சேமியா
தேவையான பொருட்கள்
- 150 கிராம் சேமியா
- ½ கப் மாதுளை விதைகள்
- 350 கிராம் பிரஷ் தயிர்
- ½ கப் பால்
- 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 10 to 12 முந்திரி பருப்பு
- 10 to 12 உலர் திராட்சை
- ¼ மேஜைக்கரண்டி கடுகு
- ¼ மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை நறுக்கி ஒரு தட்டில் வைத்து பின்பு மாதுளம் பழத்தை உரித்து மாதுளை விதைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை ஆடை வரும் வரை சுட வைத்து பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சேமியாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் சேமியாவை போட்டு பிறகு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீர் சூட்டிலேயே சேமியாவை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கரண்டியின் மூலம் சேமியாவை எடுத்து பச்சை தண்ணீரில் போட்டு பின்பு தண்ணீரை நன்கு வடித்து சேமியாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும். (சீரகத்தை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு முந்திரி பருப்பு லேசாக நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- முந்திரி பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து pan ஜ இறக்கி கீழே வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் தயிரை ஊற்றி அதை லேசாக கடைந்து விடவும்.
- பிறகு வேறு ஒரு bowl லை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் நம் கடைந்து வைத்திருக்கும் தயிரை ஊற்றி அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.
- சேமியாவில் தயிரை ஊற்றி கிளறி விடும் போதே அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலையும் சேர்த்து கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு கலவையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- கடைசியாக அதில் நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை எடுத்து சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தயிர் சேமியாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதை ஜில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் ஜில்லென்று மற்றும் அட்டகாசமாக இருக்கும் தயிர் சேமியா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.