கேசரி தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. கேசரி இல்லாமல் பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ தமிழகத்தில் முடிவடையாது என்றால் அது மிகை அல்ல. அது மட்டுமின்றி பெரும்பாலான கல்யாண விருந்துகளிலும் கேசரி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். கேசரிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ரவை கேசரி, சேமியா கேசரி, கோதுமை கேசரி, அவல் கேசரி மற்றும் ஃப்ரூட் கேசரி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பைனாப்பிள் கேசரி.
இந்த கேசரியின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை. அது மட்டுமின்றி தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் போதும் இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அதனாலேயே இல்லத்தரசிகள் ஏதேனும் இனிப்பு வகையை செய்வதாக இருந்தால் கேசரியே அவர்களின் முதன்மையான தேர்வாக இருக்கிறது.
என்ன தான் கேசரி செய்வதற்கு எளிமையான இனிப்பு வகையாக இருந்தாலும் சில சமயங்களில் லேசாக பதம் மாறிவிட்டாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான பைனாப்பிள் கேசரியை நீங்கள் சுலபமாக செய்து சுவைக்கலாம்.
இப்பொழுது கீழே பைனாப்பிள் கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பைனாப்பிள் கேசரி
தேவையான பொருட்கள்
- ½ பைனாப்பிள்
- 1 கப் ரவை
- 1½ கப் சர்க்கரை
- 15 to 20 முந்திரி பருப்பு
- 10 to 12 உலர் திராட்சை
- ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 5 to 6 சொட்டு பைனாப்பிள் எசன்ஸ்
- தேவையான அளவு மஞ்சள் கலர்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- சிறிதளவு குங்கும பூ
செய்முறை
- முதலில் முந்திரி பருப்பை நறுக்கி, பைனாப்பிளின் தோலை சீவி அதன் நடு பாகத்தை நீக்கி விட்டு சதையை மட்டும் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பைனாப்பிள் சதைகளை ஒரு bowl ல் போட்டு அதில் சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- பின்பு ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு அது லேசாக வறுபட்டதும் அதில் உலர் திராட்சையையும் போட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
- முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் அதே pan ல் ரவையை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
- ரவை வறுபடுவதர்க்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அது லேசாக சுட்டதும் அதில் மஞ்சள் கலரை போட்டு அதை சுட வைக்கவும். (கலர் சேர்ப்பதை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
- தண்ணீர் சுட்டதும் அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவையில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை குறைத்து வைத்து ரவை நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.
- ரவை நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு ரவையோடு சேருமாறு கலந்து விடவும்.
- பிறகு அதில் பைனாப்பிள் எசன்ஸ்ஸை சுமார் 5 லிருந்து 6 சொட்டு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (எசன்ஸ்ஸை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
- அடுத்து நாம் சர்க்கரையை போட்டு ஊற வைத்திருக்கும் பைனாப்பிளை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூவை தூவி அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக கெட்டியாகும் வரை அதை வேக விடவும்.
- அது லேசாக கெட்டியானதும் அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் பைனாப்பிள் கேசரி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
செய்முறை வீடியோ
Pineapple Kesari Recipe in English