இனிப்பு பிரியர்கள் மத்தியில் இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. அதில் குறிப்பாக அல்வா என்றால் கேட்கவே தேவையில்லை, அதனின் தனித்தன்மையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அல்வா என்றாலே திருநெல்வேலி மாவட்டம் தான் அனைவரது சிந்தனையிலும் வரும். ஆனால் திருநெல்வேலிக்கு பேர் போனது கோதுமை கொண்டு செய்யப்படும் கோதுமை அல்வாவே.
அல்வாக்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் கோதுமை அல்வா, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா, பேரிச்சம்பழம் அல்வா, மற்றும் பூசணிக்காய் அல்வா மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான பச்சை பருப்பு அல்வா. இதை வெவ் வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப மக்கள் சிறு சிறு செய்முறை மாற்றங்களோடு செய்து சுவைக்கிறார்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் அல்வாகலுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட.
பச்சை பருப்பு அல்வாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். சமைக்க கற்று கொள்பவர்கள் கூட இதை முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அது மட்டுமின்றி இவை மற்ற அல்வாக்களை போல செய்வதற்கும் அதிக நேரம் எடுத்து கொள்ளாது. மேலும் இதை நாம் புரதச்சத்து அதிகம் இருக்கும் பச்சை பருப்பை கொண்டு செய்வதால் இவை மற்ற அல்வாக்களை விட நம் உடம்பிற்கும் மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகள் எத்தனை முறை கேட்டாலும் எந்த ஒரு அச்சமுமின்றி இந்த பச்சை பருப்பு அல்வாவை நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.
இப்பொழுது கீழே பச்சை பருப்பு அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பச்சை பருப்பு அல்வா
தேவையான பொருட்கள்
- ½ கப் பச்சை பருப்பு
- 1 கப் சர்க்கரை
- 1 கப் நெய்
- 1 மேஜைக்கரண்டி ரவை
- 1 மேஜைக்கரண்டி கடலை மாவு
- 1 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 8 to 10 பாதாம்
- 8 to 10 பிஸ்தா
- 8 to 10 முந்திரி
- 8 to 10 உலர் திராட்சை
- சிறிதளவு குங்கும பூ
செய்முறை
- முதலில் பச்சை பருப்பை நன்கு கழுவி அதை தண்ணீரில் போட்டு சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு பாதாம், முந்திரி, மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- 6 மணி நேரத்திற்கு பிறகு பச்சை பருப்பில் இருக்கும் தண்ணீரை நன்கு வடித்து மீண்டும் அதை ஒரு முறை கழுவி பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி பின்பு அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், மற்றும் குங்கும பூவை போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிண்டி கொண்டே இருக்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை பாகை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் ரவை மற்றும் கடலை மாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வறுக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை பருப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக பொன்னிறம் ஆகும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.
- அது லேசாக பொன்னிறமானதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அல்வா நன்கு பொன் நிறம் ஆகி நெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும். (ஒரு கரண்டியின் மூலம் அல்வாவை தொடர்ந்து கிண்டி கொண்டே இருக்கவும்.)
- நெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பச்சை பருப்பு அல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் பச்சை பருப்பு அல்வா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.