மீன் வருவல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இவை திகழ்கிறது. குறிப்பாக அசைவ பிரியர்கள் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு ஒரு தனி வரவேற்பு உண்டு என்றால் அது மிகை அல்ல. உலகம் முழுவதும் மீன் வறுவலை அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு செய்து மக்கள் சுவைக்கிறார்கள்.
மீன் வருவல் மற்ற மீன் சார்ந்த உணவுகளை செய்வதை விட மிகவும் எளிமையானது. சமைக்க கற்று கொள்பவர்கள் கூட இதை வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். மீனை மசாலாவில் ஊற வைக்கும் நேரம் தவிர இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான்.
மீன் வருவலின் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருக்கிறது. அது மட்டுமின்றி இவை கோழிக்கறி, ஆட்டுக்கறி, பீப், மற்றும் போர்க்கை விட மிகவும் ஆரோக்கியமானது. மேலும் மீன் நரம்பு தளர்ச்சி, கண் பார்வை குறைபாடு, மற்றும் இதய நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. அதனால் மீன் அல்லது மீன் சார்ந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை நாம் நம் உணவு பழக்கத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவை நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவும்.
இப்பொழுது கீழே மீன் வருவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மீன் வருவல்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் மீன்
- 3 பூண்டு பல்
- 1 துண்டு இஞ்சி
- ½ எலுமிச்சம் பழம்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 சிட்டிகை மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை துண்டுகளாக்கி ஒரு தட்டில் வைத்து பின்பு இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு நாம் துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் மீனை எடுத்து இந்த மசாலாவில் போட்டு அதை நம் கைகளின் மூலம் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற விடவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் pan னின் அளவிற்கேற்ப அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீனை எடுத்து ஒவ்வொன்றாக பக்குவமாக வைத்து அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து மீனை மீண்டும் 3 நிமிடம் வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி மீனை திருப்பி போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து மீனை மீண்டும் 3 நிமிடம் வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு மீனை மீண்டும் இரு புறமும் திருப்பி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விட்டு பின்பு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் மீன் வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.