வெஜிடபிள் செஷ்வான் நூடுல்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு Indo-Chinese உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு ஒரு தனி வரவேற்பு உண்டு என்றால் அது மிகை அல்ல. நூடுல்ஸ்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக வெஜிடபிள் நூடுல்ஸ், சில்லி நூடுல்ஸ், முட்டை நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், மற்றும் மட்டன் நூடுல்ஸ் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான செஷ்வான் நூடுல்ஸ்.
நூடுல்ஸ்களில் ஸ்பெஷல் என்னவென்றால் இவை மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு வகை. மேலும் இவை செய்வதற்கும் அதிக நேரம் ஆகாது. இதனாலேயே நூடுல்ஸ் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். அது மட்டுமின்றி சமைக்கவே தெரியாத நபர்கள் கூட நூடுல்ஸை மிக சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே வெஜிடபிள் செஷ்வான் நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வெஜிடபிள் செஷ்வான் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் நூடுல்ஸ்
- 1 பெரிய வெங்காயம்
- ½ கப் கேரட்
- ¼ கப் பச்சை குடை மிளகாய்
- ¼ கப் சிவப்பு குடை மிளகாய்
- ¼ கப் மஞ்சள் குடை மிளகாய்
- 1 கப் கோஸ்
- 22 காய்ந்த மிளகாய்
- 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
- 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
- 3 மேஜைக்கரண்டி வினிகர்
- 1 மேஜைக்கரண்டி கெட்சப்
- ½ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
- 1 சிட்டிகை கருப்பு மிளகு தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு சர்க்கரை
- சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், கேரட், கோஸ், பூண்டு, இஞ்சி, ஸ்பிரிங் ஆனியன், மற்றும் குடை மிளகாயை நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாயை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி அதனுடன் 3 அல்லது 4 சோட்டு எண்ணெய் விட்டு நூடுல்ஸை போட்டு அது சுமார் 95 சதவீதம் வேகும் வரை அதை வேக விடவும். (5 லிருந்து 6 நிமிடம் வரை வேக வைத்தால் சரியாக இருக்கும்.)
- நூடுல்ஸ் 95 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு bowl ல் போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும். (அப்பொழுது தான் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொள்ளாமல் இருக்கும்.)
- அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்து தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு மற்றும் 2 மேஜைக்கரண்டி இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் வினிகர், ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வேக விடவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு செஷ்வான் சாஸை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் 2 காய்ந்த மிளகாயை கில்லி போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி மற்றும் பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், குடை மிளகாய், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் செஷ்வான் சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், கெட்சப், வினிகர், வெள்ளை மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் செஷ்வான் நூடுல்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.