உப்பு கொழுக்கட்டை தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. விநாயகர் சதுர்த்தி நெருங்கி விட்டாலே கொழுக்கட்டையை பற்றிய பேச்சுக்கள் தன்னாலே ஒலிக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காணவிருப்பது உப்பு கொழுக்கட்டை. பண்டிகை காலங்களில் மட்டுமின்றி இதை நாம் சாதாரண நாட்களிலும் செய்து காலை நேர டிபனாக சுவைக்கலாம். உப்பு கொழுக்கட்டையின் சிறப்பு என்னவென்றால் இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து விட்டால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இதை செய்வதற்கும் அதிக பொருட்கள் தேவைப்படாது.
இப்பொழுது கீழே கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
உப்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- 1 கப் இட்லி அரிசி
- ½ கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 2 காய்ந்த மிளகாய்
- 2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- ¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு இட்லி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு இட்லி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகத்தை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் பெருங்காய தூளை தூவி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், தேவையான அளவு உப்பு, மற்றும் காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வதக்கவும். (காய்ந்த மிளகாயை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றி அது கெட்டியாகும் வரை அதை வதக்கவும்.
- மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு pan ஐ கீழே இறக்கி வைத்து அதை சிறிது நேரம் ஆற விடவும்.
- மாவு ஆறிய பிறகு ஒரு கை அளவு மாவை எடுத்து அதை அவரவருக்கு விருப்பமான வடிவில் பிடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (கைகளின் மூலம் கொழுக்கட்டை பிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் வித விதமான மோல்டுகளை வாங்கி அதை பயன்படுத்தி கொள்ளலாம்.)
- இவ்வாறு மீதமுள்ள மாவையும் பிடித்து அதை தயாராக தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி பின்பு நாம் பிடித்து வைத்திருக்கும் கொழுக்கட்டையை அதில் ஒவ்வொன்றாக வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த இட்லி தட்டுகளை அதில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொழுக்கட்டைகளை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் உப்பு கொழுக்கட்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.