குருமா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக குருமாவை சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக உண்பார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி மக்கள் வித விதமாக சமைத்து சுவைக்கிறார்கள். குருமாவில் பல வகை உண்டு. அதில் சிக்கன் குருமா, மட்டன் குருமா, வெஜிடபிள் குருமா, காலிஃப்ளவர் பட்டாணி குருமா, உருளைக்கிழங்கு குருமா, மற்றும் தக்காளி குருமா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு குருமா.
என்னதான் குருமாவை பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைத்தாலும் சப்பாத்தி மற்றும் பரோட்டா குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரது விருப்பமான காம்பினேஷன் ஆக இது தான் இருக்கிறது. பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் மக்கள் சமைத்து சுவைக்கின்றனர்.
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் குருமா மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா, மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வதற்கு தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும் இதை வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.
இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
உருளைக்கிழங்கு குருமா
தேவையான பொருட்கள்
- 6 to 7 உருளைக்கிழங்கு
- 3 பெரிய வெங்காயம்
- 5 to 6 தக்காளி
- 1 கப் பச்சை பட்டாணி
- 1 to 2 பச்சை மிளகாய்
- 4 to 5 பூண்டு
- 1 இஞ்சி துண்டு
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி ஆம்சூர் தூள்
- 1 மேஜைக்கரண்டி பச்சை பயறு மாவு
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் பட்டாணியை உரித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதிலிருந்து நெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை வதக்கவும். (சுமார் 7 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கினால் சரியாக இருக்கும்.)
- 8 நிமிடத்திற்கு பிறகு அதில் பச்சை பயறு மாவு, மஞ்சள் தூள், மல்லி தூள், ஆம்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (500ml அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
- பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அது நன்கு மசாலா ஒட்டுமாறு அதை கிளறி விடவும்.
- அடுத்து அதில் மீண்டும் ஒரு முறை சுமார் 500ml அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
- 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து குருமாவை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பெருங்காயத்தை போட்டு அதை நன்கு கரைத்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை குருமாவில் ஊற்றி நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு குருமாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சப்பாத்தியுடனோ அல்லது பூரியுடனோ சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.