பாவ் பாஜி இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதற்கென்று ஒரு தனி கூட்டமே உண்டு என்றால் அது மிகை அல்ல. பெரும்பாலான உணவு பிரியர்களின் பிடித்தமான உணவுகளில் இவை கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இதில் நாம் பன்னீர், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பீட்ரூட், மற்றும் பூண்டு சேர்த்து செய்வதால் இவை உடம்பிற்கும் நல்லது. நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு மாற்றாக இந்த பன்னீர் பாவ் பாஜியை நாம் செய்து சுவைக்கலாம். மேலும் பெரும்பாலுமான குழந்தைகளும் இதை கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே பன்னீர் பாவ் பாஜி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பன்னீர் பாவ் பாஜி
தேவையான பொருட்கள்
- 400 கிராம் பன்னீர்
- 2 பாவ் பன்
- ½ கப் பெரிய வெங்காயம்
- ½ கப் காலிஃப்ளவர்
- ½ கப் பச்சை பட்டாணி
- 1 கப் தக்காளி
- 2 மேஜைக்கரண்டி பீட்ரூட்
- 1 குடை மிளகாய்
- 5 to 7 பல் பூண்டு
- 4 to 5 காஞ்ச மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 2 மேஜைக்கரண்டி பாவ் பாஜி மசாலா
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு வெண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பீட்ரூட், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், குடை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து, பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்ட பின் அதில் காலிஃப்ளவரை போட்டு அதை சுமார் 90 சதவீதம் வரை வேக விடவும்.
- காலிஃப்ளவர் 90 சதவீதம் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை நன்கு பொடியாக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே அடுத்து பீட்ரூட்டை வேக வைத்து அதை நன்கு மசித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு நாம் உரித்து வைத்திருக்கும் பட்டாணியையும் வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதை நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பேஸ்ட் ஆக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விட்டு எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பீட்ரூட், மற்றும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், பாவ் பாஜி மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வதக்கவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை அதை மசித்து விடவும்.
- 4 நிமிடத்திற்கு பிறகு அதில் பன்னீரை துருவி போட்டு அது நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை கரம் மசாலா, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய், மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை போட்டு அதை உருக விடவும்.
- வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, ஒரு சிட்டிகை பாவ் பாஜி மசாலா, மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய் பேஸ்ட்டிலிருந்து ஒரு மேஜைக்கரண்டியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு பாவ் பன்னை எடுத்து அதை பாதியாக வெட்டி அதை pan ல் போட்டு இந்த மசாலாவில் நன்கு தேய்த்து பின்னர் அதை திருப்பி போட்டு தேய்க்கவும்.
- பிறகு ஒரு தட்டில் நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கலவையுடன் இந்த பாவ் பன்னையும் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் பன்னீர் பாவ் பாஜி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.