பருப்பு குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் பருப்பு குழம்பு மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரத சத்து அதிகமாக இருக்கும் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்ப்பதனால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது.
பருப்பு குழம்பு செய்வதற்கும் மிகவும் எளிமையானவை. இதை நாம் எந்த ஒரு கடினமான செய்முறையும் பின்பற்றாமல் வெகு சுலபமாக செய்து விடமுடியும். சமைக்க தெரியாதவர்கள் கூட இதை மிக எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். மேலும் இந்த பருப்பு குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் தொடர்ந்து செய்து உண்டால் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.
இப்பொழுது கீழே பருப்பு குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்
- 150 கிராம் பாசி பருப்பு
- 100 கிராம் துவரம் பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 8 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- 2 காய்ந்த மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்னே முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)
- அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
- 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுமையாக போனதும் குக்கர் மூடியை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.)
- எண்ணெய் சுட்ட பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு பருப்பு குழம்பை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.