மேகி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக உணவு பிரியர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான் என்றால் அது மிகை அல்ல. மேகி என்ற பெயரை கேட்டாலே போதும் குழந்தைகள் தானாக கிச்சனை நோக்கி ஓடி வந்துவிடுவார்கள். மேகியை நாம் பல விதமாக செய்து சுவைக்கலாம். அதில் வெஜிடபிள் மேகி, தக்காளி மேகி, பிரட் மேகி, முட்டை மேகி, முட்டை மசாலா மேகி, சிக்கன் மேகி, மற்றும் எறா மேகி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முட்டை மசாலா மேகி.
முட்டை மசாலா மேகியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி வெகு எளிதாக குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். அதனாலேயே இதற்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி bachelor களாக இருக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உண்டு. மேகி உலகம் முழுவதும் எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமோ அதற்கு நிகரான அளவு அதன் மேல் சர்ச்சைகளும் உண்டு. எத்தனை சர்ச்சைகள் இதன் மீது இருந்தாலும் மேகியை விரும்பி உண்பவர்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை.
பொதுவாக மேகியில் நம் உடம்புக்கு தேவையான எந்த ஒரு சத்தும் இல்லை என்று உணவு வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதில் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான புரத சத்தை தரும் முட்டைகளை சேர்ப்பதனால் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனினும் மேகியில் உடம்புக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதால் இதை நம் உணவு முறையில் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை செய்து சுவைப்பதோடு நிறுத்தி கொண்டால் நல்லது.
முட்டை மசாலா மேகி
தேவையான பொருட்கள்
- 3 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
- 5 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 1 to 2 பச்சை மிளகாய்
- 3 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 பாக்கெட் மேகி மசாலா
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு ண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின்பு முட்டைகளை அதில் போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விட்டு முட்டைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை ஒரு கத்தியின் மூலம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் மேகி மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் சுமார் ரெண்டரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் மேகி துண்டுகளை எடுத்து உடைத்து போட்டு அது மசாலாவோடு ஓட்டுமாறு அதை நன்கு கலந்து விட்டு மேகி முக்கால் பாகம் வேகும் வரை வேக விடவும்.
- மேகி முக்கால் பாகம் வெந்ததும் அதில் நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் அதே pan ல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை ஆப் பாயிலாக இருக்கும்போது அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மேகி மீது பக்குவமாக வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமான முட்டை மசாலா மேகி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.