தொக்கு இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சைடிஷ் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் தொக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சைடிஷ் ஆக இருக்கிறது. தொக்குகளில் பல வகை உண்டு. அதில் இறால் தொக்கு, தக்காளி தொக்கு, கத்திரிக்காய் தொக்கு, புதினா தொக்கு, மாங்காய் தொக்கு, கொத்தமல்லி தொக்கு, மற்றும் நெல்லிக்காய் தொக்கு மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது கொத்தமல்லி தொக்கு.
பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் வழக்கமாக செய்து உண்ணும் உணவுகளை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரே உணவுகளை மீண்டும் மீண்டும் செய்து உண்ணும் போது அது ஒரு கட்டத்தில் சலித்து போவது இயல்பு தான். அப்படி சலித்து போகாமல் இருப்பதற்கு அவ்வப்போது நாம் வித்தியாசமான உணவுகளை செய்து சுவைப்பது அவசியம். அந்த வகையில் இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு நாம் வழக்கமாக செய்து உண்ணும் உணவுகளுக்கு ஒரு அருமையான மாற்று.
இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி அல்லது கடினமான செய்முறையும் இன்றி வெகு எளிதாக செய்து விடலாம். மேலும் இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது வெறும் கொத்தமல்லி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மற்றும் புளி இருந்தால் போதும். அது மட்டுமின்றி இதை ஒரு முறை செய்து கை படாமல் அப்படியே ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் இதை சுமார் ஒரு மாதம் வரை வைத்து நாம் பயன்படுத்தலாம்.
இப்பொழுது கீழே ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு
தேவையான பொருட்கள்
- 2 கொத்தமல்லி கட்டு
- பெரிய எலுமிச்சம் பழம் சைஸ் புளி
- 15 to 17 காஞ்ச மிளகாய்
- 2 மேஜைக்கரண்டி வெல்லம்
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து ஒரு தட்டில் வைத்து பரப்பி விட்டு அதை காய விடவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் புளியை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதில் புளியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஆய்ந்து வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும். (கொத்தமல்லி இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் வதக்கிய கொத்தமல்லியை ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 6 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வதக்கவும். (மிளகாய் நன்கு வதங்கி சிறிது நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.)
- காய்ந்த மிளகாய் சிறிது நிறம் மாறியதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து நாம் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- கடாயில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- நாம் வதக்கிய அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- பின்பு அதில் வெல்லத்தை எடுத்து அதை தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். (வெல்லம் விரும்பாதவர்கள் இதை போடாமல் தவிர்த்து விடலாம்.)
- பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
- பிறகு கொத்தமல்லி தொக்கை எடுத்து சாதத்தில் போட்டோ அல்லது தோசைக்கு சைடிஷ் ஆக வைத்தோ அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அருமையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழும்.