உலகம் முழுவதும் மஷ்ரூம் ஐ கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு தனி வரவேற்பு உண்டு என்றால் அது மிகை அல்ல. குறிப்பாக உணவு பிரியர்கள் மத்தியில் அதற்கு தனி மவுசு உண்டு. பொதுவாக மஷ்ரூம்களை நாம் பல விதமாக சமைத்து சுவைத்திருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மஷ்ரூம் மசாலா. இவை நான், ஃபுல்கா, சப்பாத்தி, பரோட்டா, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், ரசம் சாதம், மற்றும் ஒயிட் ரைஸ்ஸில் போட்டு சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
மஷ்ரூம் மசாலா நாம் வழக்கமாக நான், ஃபுல்கா, சப்பாத்தி, பரோட்டா, ஃப்ரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ்க்கு தொட்டுக்கொள்ளும் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்யும் சைடிஷ்கள் அலுத்து போய் இருந்தால் இந்த மஷ்ரூம் மசாலா தான் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த சைடிஷ். நம் குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி மஷ்ரூம்மில் பல சத்துக்கள் இருக்கிறது, குறிப்பாக பெரும்பாலும் மாமிசத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய விட்டமின் டி இதில் அதிகம் உண்டு. அதனால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது.
மஷ்ரூம் மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், மஷ்ரூம் வேகுவதற்கு வெகு நேரம் எடுக்காது என்பதால் இதை வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மேலும் மஷ்ரூம் மசாலாவை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. வெறும் மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் வீட்டில் இருக்கும் மசாலாக்கள் இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே மஷ்ரூம் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மஷ்ரூம் மசாலா
தேவையான பொருட்கள்
- 500 கிராம் மஷ்ரூம்
- 3 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 1 துண்டு பட்டை
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ½ மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் சோம்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.
- தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூம்மை சேர்த்து அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை பக்குவமாக கிளறி விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு ஒரு கிளறு கிளறி விட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (3 கையளவு தண்ணீர் தெளித்தால் சரியாக இருக்கும்.)
- பின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மஷ்ரூம் மசாலா எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.