தயிர் சாதம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். தயிர் சாதம் தென் இந்தியாவின் பாரம்பரியமான உணவும் கூட. அதனால் தான் தென் இந்தியாவில் இருக்கும் கோயில்களில் தயிர் சாதத்தை பிரசாதமாக வழங்குவதை நம்மால் காண முடியும். தயிர் சாதத்தை பொதுவாக மூன்று முறையில் நாம் செய்யலாம். வெறுமனே சாதத்தில் தயிரை ஊற்றி கலந்து விடுவது, தயிர் சாதத்தில் தாளித்து ஊற்றுவது, மற்றும் தாளித்து ஊற்றிய தயிர் சாதத்தில் பழங்களை சேர்த்து செய்வது. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்யப்படும் தயிர் சாதம்.
தயிர் சாதம் இந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இன்று உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் இவை பிரபலம் அடைந்து இருக்கிறது. தமிழில் தயிர் சாதம் என்று அழைக்கப்படும் இவை ஆங்கிலத்தில் yogurt rice என்றும், தெலுங்கு மொழியில் daddojanam என்றும், மற்றும் கன்னட மொழியில் mosaranna என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக விருந்துகளில் கடைசியாக தயிர் சாதம் பரிமாறுவதை தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
தயிர் சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய ஒரே சாப்பாடு வகை இது தான். அது மட்டுமின்றி உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது குறிப்பாக காய்ச்சல் அல்லது வயிற்று பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளில் தயிர்சாதம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
இப்பொழுது கீழே தயிர் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாதம்
- ½ கப் தயிர்
- ½ கப் பால்
- ¼ கப் கேரட்
- ¼ கப் மாதுளம் பழம்
- 1 to 2 பச்சை மிளகாய்
- 2 to 3 காஞ்ச மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி நறுக்கிய இஞ்சி
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காய தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் கேரட்டை துருவி, மாதுளம் பழத்தை உரித்து, பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு கொதிக்க விடவும். (ஆடை அதிகம் சேராமல் இருப்பதற்கு அவ்வப்போது ஒரு கரண்டியின் மூலம் அதை கிண்டி கொண்டே இருக்கவும்.)
- பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதை வேக வைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- சாதம் ஆறியவுடன் அதை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் லேசாக மசித்து விடவும்.
- பின்னர் அதில் தயிர் மற்றும் நாம் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் நாம் துருவி வைத்திருக்கும் கேரட், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மாதுளம் பழம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை பக்குவமாக நன்கு கலந்து விட்டு அப்படியே வைத்து கொள்ளவும்.
- மாதுளம் பழத்தை தயிர் சாதத்தை சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் சாதத்தில் போட்டு கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை அளவு பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் தாளித்த கலவையை நாம் கலந்து வைத்திருக்கும் தயிர் சாதத்தில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு பின்பு சிறிது நேரம் ஆற விட்டு பின் அதை பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் அட்டகாசமான மற்றும் மிகவும் அருமையாக இருக்கும் தயிர் சாதம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.