ரசம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு. இவை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த அளவிற்கு பிரபலம் என்றால், ரசம் இல்லாது எந்த ஒரு விருந்தும் நிறைவு பெறாது. ரசம்களில் பல வகை உண்டு. அதில் மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், முருங்கைக்கீரை ரசம், இஞ்சி ரசம், புதினா ரசம், மற்றும் பன்னீர் ரசம் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அதிக மருத்துவ குணம் கொண்ட மிளகு ரசம்.
மிளகு ரசம் அஜீரணத்திற்கு மற்றும் சளிக்கு மிகவும் உகந்த உணவு. அதனாலேயே ஒரு அதீத விருந்துக்கு பிறகு கடைசியாக இதை உணவில் சேர்த்து உண்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் ஜலதோஷத்திற்கு மருத்துவர்களே மிளகு ரசத்தை பருக அறிவுறுத்துவது வழக்கம். இவை உடல் எடை குறைப்பதற்கும் மிகவும் உகந்தது என கூறப்படுகிறது. அதனால் உடல் குறைப்பு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் தினமும் ஒரு டம்ளர் மிளகு ரசத்தை பருகலாம்.
மிளகு ரசத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் போதும் இதை நாம் வெறும் 15 நிமிடங்களிலேயே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை செய்வதற்கும் அதிக பொருட்கள் தேவைப்படாது. வெறும் மிளகு, சீரகம், பூண்டு, மற்றும் தக்காளி இருந்தால் போதும் இதை செய்து விடலாம். மேலும் சமைக்க கற்று கொண்டிருப்பவர்கள் கூட இதை மிக எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே மிளகு ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மிளகு ரசம்
தேவையான பொருட்கள்
- பெரிய நெல்லிக்காய் சைஸ் புளி
- 1 தக்காளி
- 2 பூண்டு பல்
- 2 காஞ்ச மிளகாய்
- 10 to 12 வெந்தயம்
- 2 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- ¼ மேஜைக்கரண்டி கடுகு
- ¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பின்பு கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். (இதை மிக்ஸி ஜார்க்கு பதிலாக அம்மிக்கல்லிலும் தூள் செய்து கொள்ளலாம்.)
- பின்பு 2 பல் பூண்டை அம்மிக்கல்லில் தட்டி மிளகு மற்றும் சீரக தூளுடன் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் தக்காளியை போட்டு அதை நம் கைகளின் மூலம் பக்குவமாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை வதக்கவும்.
- பிறகு அதில் பெருங்காய தூள், மஞ்சள் தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் பிசைந்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.
- ரசம் கொதிக்க ஆரம்பித்த உடனே அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மிளகு ரசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.