பொதுவாகவே கோடை காலம் வந்து விட்டாலே உடல் வெப்பத்தை தணிக்க ஜில்லென்று பழச்சாறுகளை பருகத் தான் பலரும் விரும்புவார்கள். அதற்கேற்றவாறே கோடை காலங்களில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே புதிதாக பழச்சாறுகள் விற்பனை செய்யும் கடைகள் உதயமாவதை நாம் காணலாம். அந்த அளவிற்கு கோடை காலம் வந்து விட்டாலே பழச்சாறுகளுக்கு மவுசு தானாக கூடி விடும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லென்று பழச்சாறுகளை பருகும் சுகமே தனி தான். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மாம்பழம் லஸ்ஸி.
பொதுவாகவே லஸ்ஸிக்கு இருக்கும் வரவேற்பே தனி தான். லஸ்ஸியுடன் பழச்சாறு சேர்த்து செய்யும் போது அதனின் சுவை இரட்டிப்பு மடங்காகிறது. மாம்பழம் லஸ்ஸியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் கண் இமைக்கும் நேரத்தில் வெகு சுலபமாக செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை நாம் கோடை காலங்களில் மட்டும்தான் சுவைக்க முடியும். ஏனெனில் மற்ற சீசன்களில் நன்கு ருசியான மாம்பழம் விளைச்சல் இருக்காது. அதனால் மாம்பழம் லஸ்ஸி கோடை சீசனுக்கு மட்டும்தான் கிடைக்கும். இவை மாம்பழம் மற்றும் பாலை கொண்டு செய்யப்படுவதால் இவை உடம்புக்கும் மிகவும் நல்லது.
நாம் நம் குழந்தைகளுக்கு வழக்கமாக பலவிதமான பழச்சாறுகளை செய்து கொடுத்திருப்போம். அந்த வகையில் கோடை காலங்களில் மட்டும் கிடைக்கும் இந்த அட்டகாசமான மாம்பழம் லஸ்ஸியை அவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் இதை மிகவும் விரும்பி பருகுவார்கள். மாம்பழம் லஸ்ஸியை இன்னும் அட்டகாசமாக ஆக்க அதில் நாம் ஒரு scoop ஐஸ்கிரீம் மற்றும் wafer biscuits ஐ சேர்த்து கொள்ளலாம். ஐஸ்கிரீம் சேர்த்த லஸ்ஸியை உலகில் எந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லும்? என்ன உங்களுக்கே நாவில் எச்சில் ஊறி விட்டதா?
இப்பொழுது கீழே மாம்பழம் லஸ்ஸி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மாம்பழம் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
- 1 மாம்பழம்
- 1 கப் தயிர்
- ½ கப் பால்
- ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 1 மேஜைக்கரண்டி பாதாம்
- 1 மேஜைக்கரண்டி பிஸ்தா
- ½ மேஜைக்கரண்டி குங்கும பூ
- தேவையான அளவு சர்க்கரை
- தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை
- முதலில் மாம்பழம், பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி அதை நன்கு காய்ச்சி பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும்.
- பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத்தை எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 4 லிருந்து 6 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
- பின்னர் அதில் ஒரு கப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்பு அதில் நாம் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பால், அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை, மற்றும் நாம் தூள் செய்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளிலிருந்து சுமார் அரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- லஸ்ஸி கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து அதை மீண்டும் அரைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கிளாஸ் டம்ப்ளரை எடுத்து அதில் அவரவருக்கு விருப்பமான அளவு ஐஸ் க்யூப்ஸ்ஸை போட்டு பின்பு நாம் அரைத்த லஸ்ஸியை அதில் ஊற்றவும்.
- பிறகு அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் பிஸ்தா, பாதாம், மற்றும் குங்குமப்பூவை தூவி அதை சில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் அருமையான சில்லென்று இருக்கும் மாம்பழம் லஸ்ஸி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.