வடகறி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சைடிஷ். குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராம பகுதிகளில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்த ஒரு உணவு. வடகறிக்கு என்று ஒரு தனி கூட்டமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
வடகறியை பொதுவாக தோசை மற்றும் இட்லிக்கு சைடிஷ்ஷாக மக்கள் உண்கிறார்கள். ஆனால் நாம் இதில் பயன்படுத்தும் வடைகளை சிறிது பெரிதாக போட்டு செய்தால் இதை நாம் ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சுவைக்கலாம். நாம் வழக்கமாக உண்டு சலித்துப்போன மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று.
வடகறியை பொதுவாக முந்தைய நாள் மீதமுள்ள வடைகளை பயன்படுத்தி செய்வதுதான் வழக்கம். ஆனால் இதில் நாம் சூடாக வடைகளை செய்து பயன்படுத்தினால் இவை இன்னும் அருமையாக இருக்கும். வடகறி செய்வதற்கு சிறிது நேரம் எடுத்து கொண்டாலும் இதை உண்ணும் போது இதனின் சுவை அவை அனைத்தையும் மறக்கடித்து விடும்.
இப்பொழுது கீழே வடகறி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வடகறி
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை பருப்பு
- 3 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 4 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 3 பூண்டு பல்
- 2 இஞ்சி துண்டு
- 1 பச்சை மிளகாய்
- 3 காஞ்ச மிளகாய்
- 6 to 8 முந்திரி
- 1 பட்டை துண்டு
- 1 பிரியாணி இலை
- 2 கிராம்பு
- 1 நட்சத்திர பூ
- 2 ஏலக்காய்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 2 மேஜைக்கரண்டி தனியா தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் கடலை பருப்பை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
- பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, தேங்காயை துருவி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து விடவும்.
- அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, காய்ந்த மிளகாய், மற்றும் 2 சிட்டிகை உப்பு சேர்த்து அதை கொர கொரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.)
- பின்னர் அதை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக போடவும்.
- அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
- வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய், மற்றும் அரை மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து அதை வறுக்கவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை வதக்கவும்.
- பின்னர் அதில் மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் முந்திரி பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் வடையை போட்டு அதை பக்குவமாக மசாலாவுடன் நன்கு சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து அதில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான வடகறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.