வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமானவை. பொதுவாக பலரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடைகளை வழக்கமாக சுவைப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முருங்கைக்கீரை வடை.
முருங்கைக்கீரை வடையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையில் உடம்புக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருக்கின்றது. மேலும் இதை மற்ற வடைகளை போன்றே எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக நாம் செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான சத்தான மாற்றும் கூட.
பொதுவாக குழந்தைகளுக்கு முருங்கை கீரையை பொரியல் செய்து கொடுத்தால் அதை அவர்கள் உண்ண அடம் பிடிப்பார்கள். ஆனால் இவ்வாறு முருங்கைக்கீரை வடையை செய்து கொடுத்தால் அவர்களை கேட்கக்கூட வேண்டாம் அவர்களாக தன்னால் இதை விரும்பி உண்பார்கள். இன்னும் வேண்டும் என்று கேட்டு உண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இப்பொழுது கீழே முருங்கைக்கீரை வடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
முருங்கைக்கீரை வடை
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கடலை பருப்பு
- 1 கைப்பிடி அளவு முருங்கை கீரை
- 1 பெரிய வெங்காயம்
- 4 காய்ந்த மிளகாய்
- ½ துண்டு இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் கடலை பருப்பை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
- பின்பு வெங்காயம், முருங்கைக்கீரை, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து விடவும்.
- அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை கொர கொரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.)
- பின்னர் அதை எடுத்து ஒரு bowl ல் கொட்டி அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து அதை நன்கு கலந்து பிணைந்து கொள்ளவும்.
- இப்பொழுது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.
- பிறகு இந்த மாவில் இருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி அதை கையில் வைத்து ஒரு தட்டு தட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக போடவும்.
- அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
- வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான முருங்கைக்கீரை வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.