முட்டையை பொதுவாக நாம் பல விதமாக செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான குடை மிளகாய் முட்டை பொடிமாஸ். இதை வெறும் குடை மிளகாய் மற்றும் முட்டையை வைத்தே நாம் வெகு எளிதாக செய்து விடலாம். குடை மிளகாய் முட்டை பொடிமாஸ் அனைத்து சாதத்தோடு உண்பதற்கும் ஒரு அருமையான சைடு டிஷ். இவை வெறுமனே அப்படியே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண உகந்தது.
இப்பொழுது கீழே குடை மிளகாய் முட்டை பொடிமாஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
குடை மிளகாய் முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 1 குடை மிளகாய்
- 4 to 6 பூண்டு பல்
- ¾ மேஜைக்கரண்டி 65 மசாலா
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் வெங்காயம், குடை மிளகாய், மற்றும் பூண்டை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை குறைத்து விட்டு அதில் 65 மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி பின்பு தீயை மிதமான சூட்டிற்கு மாற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.
- முட்டை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான குடை மிளகாய் முட்டை பொடிமாஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.