பருப்பு பொடி சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சுட சுட இருக்கும் சாதத்தில் நெய்யோ அல்லது எண்ணெய்யையோ ஊற்றி அதில் இந்த பருப்பு பொடியை போட்டு உண்ணும் சுவையே தனி தான் என்றால் அது மிகையல்ல. நாம் இன்று இங்கு காண இருப்பது சுவையான பருப்பு பொடி ரெசிபி தான்.
பருப்பு பொடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி வெகு எளிதாக வெறும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதை நாம் செய்து விடலாம். பருப்பு பொடியை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்து விடலாம்.
பருப்பு பொடியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதை நாம் அரைத்தவுடன் கைபடாமல் ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு விட்டால் இதை நாம் சுமார் 2 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இப்பொழுது கீழே பருப்பு பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 100 கிராம் பாசி பருப்பு
- 100 கிராம் பொட்டுக்கடலை
- 10 to 12 காய்ந்த மிளகாய்
- 10 to 12 பல் பூண்டு
- 2 மேஜைக்கரண்டி சீரகம்
- 2 சிட்டிகை கட்டி பெருங்காயம்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் பூண்டின் தோலை உரித்து அதை தயார் செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு அதை நன்கு சிவக்க வறுக்கவும். (இது சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை எடுக்கலாம்.)
- துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- அடுத்து அதே கடாயில் பாசி பருப்பை போட்டு அதை நன்கு சிவக்க வறுக்கவும். (இது சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை எடுக்கலாம்.)
- பாசி பருப்பு நன்கு சிவந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு அதே கடாயில் பொட்டுக்கடலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும். (பொட்டுக்கடலை லேசாக சூடானால் போதும்.)
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதையும் ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்னர் அதே கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும். (அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை சேர்த்து கொள்ளலாம்.)
- 2 நிமிடத்திற்கு பிறகு அதையும் ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- இப்பொழுது அதே கடாயில் சீரகம் மற்றும் பெருங்காய கட்டியை போட்டு சீரகம் நன்கு பொரிந்து வரும் வரை அதை வறுக்கவும். (இது சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை ஆகலாம்.)
- சீரகம் நன்கு பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பிறகு அதே கடாயில் ஒரு கை அளவு கருவேப்பிலையை போட்டு அது நன்கு மொறு மொறுப்பான பதத்தை எட்டும் வரை அதை வறுக்கவும்.
- கருவேப்பிலை மொறு மொறுப்பான பதத்தை எட்டியதும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு அந்த கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தோலை உரித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு அதை நன்கு மொறு மொறுப்பான பதம் வரும் வரை அதை வறுக்கவும்.
- பூண்டு மொறு மொறுப்பான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு இவை அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு சாதத்தில் நெய் ஊற்றி நாம் அரைத்த பொடியை போட்டு அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு பொடி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.