பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளையுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள். நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இந்த மொறு மொறுப்பான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகளை கெட்சப்வுடன் சேர்த்து உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே இதை செய்து சுவைக்க முடியும். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்ய முடியும். இதை செய்வதற்கும் அதிக பொருட்களும் தேவைப்படாது. அவசர கால கட்டங்களில் குறுகிய நேரத்தில் நாம் செய்து உண்ணக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி இவை.
இப்பொழுது கீழே பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள்
தேவையான பொருட்கள்
- 4 உருளைக்கிழங்கு
- ½ கப் பொட்டு கடலை
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
- 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
- பிறகு அரை கப் அளவு பொட்டு கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் நாம் உருளைக்கிழங்கை மசித்து வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவில் இருந்து இரண்டரை மேஜைக்கரண்டி அளவு மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (தண்ணீர் எதுவும் இதில் சேர்த்து விடக்கூடாது.)
- அடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு மாவை எடுத்து அதை நன்கு உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
- அது இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.