பொரி உருண்டை தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் ஒரு பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு சிற்றுண்டி. குறிப்பாக முந்தைய தலைமுறையினர்களிடம் பொரி உருண்டைகளுக்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகையல்ல. இந்த பொரி உருண்டைகளை கண்டதுமே அவர்கள் அவர்களின் சிறிய வயது ஞாபகங்களுக்கு சென்று விடுவார்கள்.
பொரி உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை ஒரு முறை செய்து ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்தால் இதை நாம் சுமார் 10 நாட்கள் வரை அதனின் மொறு மொறுப்புதன்மை போகாமல் வைத்து உண்ணலாம். இதில் சிலர் தேங்காயை சேர்த்தும் செய்வார்கள். ஆனால் நாம் இதை தேங்காயை பயன்படுத்தி செய்தால் இதை நாம் 10 நாட்கள் வரை வைத்து உண்ண முடியாது.
நாம் இந்த பொரி உருண்டையில் சேர்க்கும் அவல் பொரியில் நார் சத்து மற்றும் புரத சத்தும், மற்றும் நாம் சேர்க்கும் முந்திரியிலும் புரத சத்து இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கு தாராளமாக எவ்வித அச்சமுமின்றி எத்தனை உருண்டைகள் வேண்டுமானாலும் நாம் கொடுக்கலாம். அவர்களும் இதை விரும்பி உண்பார்கள். மேலும் அவர்கள் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு மற்றும் processed food களுக்கு பொரி உருண்டைகள் ஒரு நல்ல சத்தான மாற்று.
இப்பொழுது கீழே பொரி உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பொரி உருண்டை
தேவையான பொருட்கள்
- 2 கப் அவல் பொரி
- ½ கப் வெல்லம்
- ¼ கப் வறுத்த வேர்க்கடலை
- 1 ½ மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- ¼ மேஜைக்கரண்டி சுக்கு தூள்
- ¼ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 8 to 10 முந்திரி பருப்புகள்
- தேவையான அளவு நெய்
செய்முறை
- முதலில் அவல் பொரியை ஒரு துணியில் கொட்டி அதை நன்கு சுத்தம் செய்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து, பின்பு முந்திரி பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முந்திரி பருப்புகளை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு bowl லை எடுத்து அதில் அவல் பொரி, வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலை, மற்றும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை தூள் செய்து போட்டு 2 கிளறு கிளறி பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு கரைத்து விடவும்.
- தண்ணீர் சேர்க்கும் போது கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக்கூடாது.
- பின்பு வெல்லம் நன்கு கரைந்ததும் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி அதை நன்கு வடிகட்டி கொள்ளவும்.
- பிறகு வேறொரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி அதை மீண்டும் சுட வைக்கவும்.(அவ்வப்போது அதை ஒரு கரண்டியை கொண்டு கிண்டி விடவும்.)
- வெல்லம் சிறிது சூடானதும் அதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து கவனமாக ஒரு கம்பி பதத்தை பாகு எட்டி விட்டதா என்பதை பார்க்கவும்.
- வெல்லப்பாகு 2 கம்பி பதத்தை தாண்டியவுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் வெல்ல பாகிலிருந்து ஒரு கரண்டியின் மூலம் 2 துளிகளை எடுத்து விடவும்.
- பின்பு அதை நம் கைகளின் மூலம் உருட்டும் போது அது நன்கு உருட்ட வரவேண்டும். (இது தான் பாகின் சரியான பதம், இந்த பதத்தை பாகு தாண்டிவிட்டால் நம் பொரி உருண்டைகள் நன்கு இறுக்கமாக ஆகிவிடும்.)
- அப்படி உருட்ட வந்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் கலந்து வைத்திருக்கும் அவல் பொரி கலவையை கொட்டி அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.
- பிறகு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த பொரி கலவையை சூடாக இருக்கும் போதே நாம் உருண்டைகளாக பிடித்தால் தான் உண்டு அப்படி இல்லை என்றால் அவை ஆறியவுடன் நம்மால் பிடிக்க முடியாது.
- அதனால் நம் கைகளில் நன்கு நெய்யை தடவி கொண்டு அது சூடாக இருக்கும் போதே அதை பக்குவமாக உருண்டைகளாக பிடித்து அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் மொறு மொறுப்பாக இறுக்கும் பொரி உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.