ராஜ்மா வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். அங்கு மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் ராஜ்மாவும் ஒன்று. ராஜ்மாவை வெவ்வேறு இடங்களில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். இன்று இங்கு நாம் காண இருப்பது பஞ்சாபிய முறையில் செய்யப்படும் பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா.
ராஜ்மா இந்தியாவில் மட்டுமின்றி நேபாளத்திலும் மக்கள் அன்றாடம் சமைத்து உண்ணும் உணவாக இருக்கிறது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ராஜ்மா பீன்ஸ் கொண்டு வர பட்டதற்கு பின்பு இந்த ராஜ்மா உணவு இந்தியாவில் உதயம் ஆனதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ராஜ்மா பீன்ஸ் இந்தியாவில் இருக்கும் இமாச்சலப் பிரதேஷ், ஜம்மு, மற்றும் நேபாளத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
ராஜ்மா பீன்ஸில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. பொதுவாக இதை வட இந்திய மக்கள் சாதத்தில் ஊற்றி உண்பார்கள். மேலும் ராஜ்மாவை சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆகவும் சுவைப்பார்கள். நாம் வழக்கமாக சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆக உண்ணும் பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் பீஸ் மசாலாவிற்கு இவை ஒரு நல்ல மாற்று.
இப்பொழுது கீழே பஞ்சாபி ராஜ்மா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா
தேவையான பொருட்கள்
- 1 கப் ராஜ்மா பீன்ஸ்
- 3 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 6 பூண்டு பல்
- 2 இஞ்சி துண்டு
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி கஸ்தூரி மேத்தி
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் ராஜ்மா பீன்ஸ்ஸை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- 6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் ராஜ்மா பீன்ஸ்ஸை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி போட்டு பீன்ஸுக்கு மேலே 2 இன்ச் அளவு தண்ணீர் இருக்குமாறு தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
- 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை கீழே இறக்கி அதன் விசில் போகும் வரை அதை அப்படியே இருக்க விடவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்கு பொன்நிறம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் பொன்நிறம் ஆனதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலமும் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- வெங்காயம் ஆறியவுடன் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகமாக ஊற்றி விடக்கூடாது வெங்காயம் அரைபடுவதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் சேர்த்து கொள்ளவும்.)
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 6 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மூடி போட்டு சுமார் 16 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் ராஜ்மா பீன்ஸ்ஸை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு மீண்டும் சுமார் 16 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்குப் பிறகு மூடியை திறந்து அதில் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அதை ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு பின்பு அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதை சுட சுட சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ பரிமாறவும். (உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பஞ்சாபி ராஜ்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.