சிக்கன் 65 உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான முட்டை 65. சிக்கன் 65 யை போன்றே இவையும் மிகவும் சுவையாக மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும். முட்டை 65 யையும் நாம் சிக்கன் 65 யை போன்றே வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், முட்டை ஃப்ரைட் ரைஸ், மற்றும் சிக்கன் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக நாம் உண்ணலாம். மேலும் இவை நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு ஒரு அருமையான மாற்றும் கூட.
முட்டை 65 யை நம் வீட்டிலேயே மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மேலும் பொதுவாக முட்டையை உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டையை இவ்வாறு 65 யாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி இன்னும் வேண்டும் என்று தானாக கேட்டு உண்பார்கள்.
இப்பொழுது கீழே முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
முட்டை 65
தேவையான பொருட்கள்
- 6 முட்டை
- 100 கிராம் சோள மாவு
- 50 கிராம் மைதா மாவு
- 6 மேஜைக்கரண்டி தயிர்
- 1 குடை மிளகாய்
- 3 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 2 மேஜைக்கரண்டி 65 மசாலா
- ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
செய்முறை
- முதலில் குடை மிளகாய் மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊத்தி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து அதை நன்கு அடித்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கிண்ணத்தில் நன்றாக எண்ணெய்யை தடவி நாம் அடித்து வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றவும்.
- பிறகு ஒரு குக்கரையோ அல்லது இட்லி பாத்திரத்தையோ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் பாகம் அளவு தண்ணீர் ஊற்றி நாம் முட்டையை ஊற்றி வைத்திருக்கும் கிண்ணத்தை அதனுள் வைத்து மூடி போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு பல் குத்தும் குச்சியை வைத்து முட்டை நன்கு வெந்ததை உறுதி செய்த பின் அதை எடுத்து வெளியே வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- முட்டை ஆறியவுடன் அதை அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு bowl ல் சோள மாவு, மைதா மாவு, தயிர், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிது தண்ணியாக கலந்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் முக்கி எண்ணெய்யில் போடவும். (முட்டை துண்டுகளை மாவில் லேசாக அமுக்கினால் போதும் அதிக மாவுடன் எண்ணெய்யில் போட்டால் அது பஜ்ஜி போல் ஆகிவிடும்.)
- பின்பு முட்டை ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே மீதமுள்ள முட்டை துண்டுகளையும் கடாயின் அளவிற்கேற்ப 2 அல்லது 3 முறையாக போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய் மற்றும் ஸ்பிரிங் ஆனியனை போட்டு வறுத்தெடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் முட்டையோடு சேர்த்து நன்கு கிளறி அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான முட்டை 65 தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.