செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும் செட்டிநாடு சிக்கன் கிரேவி என்றால் கேட்கவே தேவையில்லை அதற்கு என்று ஒரு தனி உணவு பிரியர்கள் கூட்டம் உண்டு. செட்டிநாடு சிக்கன் கிரேவியின் மசாலாக்கள் நாம் வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியில் இருந்து சற்று மாறுபடும். இந்த மசாலாக்கள் தான் செட்டிநாடு சிக்கன் கிரேவியின் சுவைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.
செட்டிநாடு சிக்கன் கிரேவியை நாம் மற்ற குழம்பு சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது சாதத்தில் போட்டு பிரட்டியோ, அல்லது சப்பாத்தி, நான், மற்றும் பரோட்டாக்கு சைட் டிஷ் ஆகவும் நாம் உண்ணலாம். ஆனால் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதை விட இவை பரோட்டாவுக்கு ஒரு அசத்தலான காம்பினேசன் ஆக இருக்கும். ஒரு முறை பரோட்டாவை இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவியுடன் சுவைத்தால் போதும் இதனின் சுவை நாக்கிலேயே தங்கிவிடும்.
இப்பொழுது கீழே செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்
- 1 கிலோ சிக்கன்
- 15 to 20 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- ¼ கப் துருவிய தேங்காய்
- 4 காஞ்ச மிளகாய்
- 3 பூண்டு புல்
- 1 இஞ்சி துண்டு
- 1 மேஜைக்கரண்டி தயிர்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி மல்லி
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 பட்டை துண்டு
- 1 பிரியாணி இலை
- 1 நட்சத்திர சோம்பு
- 4 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 1 ஜாவித்திரி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை துருவி, மற்றும் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl ஐ எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
- பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்திரி, சோம்பு, சீரகம், மற்றும் மிளகை போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வறுக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் மல்லி மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- பிறகு அதே pan ல் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு தேங்காய் பொன் நிறம் வரும் வரை வறுத்து அதையும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பொருட்களோடு சேர்த்து ஆற விடவும்.
- அது ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு கிளறி விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தக்காளியை நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து அதில் சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவுடன் ஓட்டுமாறு அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒரு மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடியை போட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.)
- 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.