பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சிலோன் பரோட்டா.
பரோட்டாகளுக்கு எத்தனை சைடிஸ் இருந்தாலும் அவை எவையும் சிக்கன் சால்னாவுக்கு ஈடாக இருக்க முடியாது. அந்த வகையில் சிலோன் பரோட்டாவுடன் சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதையும் நாம் காணப்போகிறோம். சிலோன் பரோட்டா மற்றும் சிக்கன் சால்னாவை செய்வதற்கு அதிக நேரம் எடுத்தாலும் பரோட்டாவை சிக்கன் சால்னாவில் தொட்டு நம் நாவில் வைக்கும் போது ஏற்படும் சுவை அவை அனைத்தையும் மறக்கடித்து விடும். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா?
இப்பொழுது கீழே சிலோன் பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சிலோன் பரோட்டா சிக்கன் சால்னா
தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா மாவு
- ½ கிலோ சிக்கன் எலும்பு
- 1 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- ½ கப் துருவிய தேங்காய்
- 3 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 2 பச்சை மிளகாய்
- 2 பட்டை துண்டு
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 2 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
- 3 மேஜைக்கரண்டி சோம்பு
- 2 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி கசகசா
- 2 பிரியாணி இலை
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை துருவி, மற்றும் சிக்கன் எலும்புகளை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவை கொட்டி அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு மாவின் நடுவே சின்ன குழியை உருவாக்கி அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி உடைத்து ஊற்றிய முட்டையை சுற்றி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை பிசைந்து அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
- பிறகு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு சுமார் 30 லிருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும்.
- 40 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை சிறிது நேரம் பிசைந்து அதன் மேலே நன்கு எண்ணெய்யை தடவி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை மீண்டும் சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக ஆகி அதன் மீது எண்ணெய்யை தடவி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு மீண்டும் சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- மாவு ஊறுவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, 2 மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், கசகசா, மற்றும் பொட்டுக்கடலையை போட்டு அதை நன்கு வறுக்கவும்.
- அடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அது நன்கு பொன் நிறம் வரும் வரை அதை வறுக்கவும்.
- தேங்காய் வறுபட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதை இறக்கி கீழே வைத்து சிறிது நேரம் ஆற விட்ட பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோம்பை சேர்த்து அதை வறுக்கவும்.
- சோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி வதங்கியவுடன் அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை நன்கு கிளறி விடவும்.
- பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு சிக்கன் நன்கு வேகும் வரை அதை வேக விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை ஒரு சப்பாத்தி தேய்க்கும் கல்லில் வைத்து நம் கைகளில் எண்ணெய்யை தடவி அந்த உருண்டையை கைகளின் மூலம் நன்கு மெல்லிசாக வரும் வரை அதை விரித்து விடவும்.
- அடுத்து அதை இடது புறத்தில் இருந்து ஒரு மடி வலது புறத்தில் இருந்து ஒரு மடி மடித்து பின்பு மேலிருந்து ஒரு மடி கீழிருந்து ஒரு மடி மடித்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமிருக்கும் உருண்டைகளையும் செய்து அதன் மீது நன்கு எண்ணெய்யை தடவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவை போட்டு அது ஒரு பக்கம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து நாம் செய்து வைத்திருக்கும் சிக்கன் சால்னா உடன் சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் சிலோன் பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.