நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. நக்கட்ஸ்ஸில் சிக்கன் நக்கட்ஸ், முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு நக்கட்ஸ். இவை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி.
பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த உருளைக்கிழங்கு நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பொதுவாக நாம் மாலை நேரங்களில் உண்ணும் சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று.
உருளைக்கிழங்கு நக்கட்ஸ்ஸை விரும்பி உண்பவர்கள் இதை பொதுவாக chat shop களில் அல்லது ரெஸ்டாரன்ட்களில் தான் இதை வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் இதை நாம் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் அதே சுவையில் சுகாதாரமான முறையில் செய்து சுவைக்கலாம். நம்கு ழந்தைகளுக்கும் எந்தவிதமான ஒரு தயக்கமுமின்றி கொடுக்கலாம். எனினும் உருளைக்கிழங்கில் வாயு தன்மை அதிகம் இருப்பதால் இதை அளவோடு உண்பது நல்லது.
இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு நக்கட்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான விளக்கத்தையும் காண்போம்.
உருளைக்கிழங்கு நக்கட்ஸ்
தேவையான பொருட்கள்
- 3 பிரட்
- 3 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 2 முட்டை
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- சிறிதளவு மிளகு தூள்
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அரைத்து கொள்ளலாம்.
- பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
- 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும். (தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)
- பிறகு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் bread crumbs ஐ போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து இந்த உருளைக்கிழங்கு கலவையை சிறிது சிறிதாக எடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவில் பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அனைத்து துண்டுகளையும் இவ்வாறு செய்த பின் அதை பிரிட்ஜில் சுமார் 15 நிமிடம் வரை வைக்கவும்.
- பின்னர் முட்டைகளை ஒவ்வொன்றாக ஒரு bowl ல் உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து கொள்ளவும். (மஞ்சள் கருவை விரும்பாதவர்கள் அதை நீக்கி விடலாம்.)
- முட்டையை விரும்பாதவர்கள் முட்டைக்கு பதிலாக கால் கப் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருளைக்கிழங்கு நக்கட்ஸ்ஸை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பிரிட்ஜில் வைத்து இருக்கும் நக்கட்ஸ் துண்டுகளை வெளியே எடுத்து பக்குவமாக ஒவ்வொன்றாக முட்டையில் நன்கு முக்கி பின்பு அதை நாம் செய்து வைத்திருக்கும் bread crumbs சில் நன்கு உருட்டி அதை எண்ணெய்யில் போடவும்.
- பின்னர் அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொன்னிறமானதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுடசுட கெட்சப்புடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு நக்கட்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.