பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான மாதுளம் பழம் கொண்டு செய்யப்படும் மாதுளை மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள்.
மாதுளை மில்க் ஷேக் செய்வதற்கு பால் மற்றும் மாதுளை பழம் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். ஆனால் இதை நாம் ஐஸ்கிரீம், பாதாம், பிஸ்தா, மற்றும் சாக்லெட் சிரப்பை சேர்த்து செய்தால் இவை இன்னும் சுவையாக இருக்கும். மேலும் மாதுளம் பழத்தை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட மாதுளம் பழத்தை இவ்வாறு மில்க் ஷேக்காக செய்து கொடுத்தால் அதை விரும்பி பருகுவார்கள். தற்போது இருக்கும் கோடை சூடுக்கு இந்த மாதுளை மில்க் ஷேக்கை வீட்டிலேயே செய்து பருகி உடம்பு சூட்டை தனியுங்கள்.
இப்பொழுது கீழே மாதுளை மில்க் ஷேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மாதுளை மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
- 2 மாதுளம்பழம்
- 2 டம்ளர் பால்
- 2 scoop ஐஸ்கிரீம்
- 1 மேஜைக்கரண்டி கண்டன்ஸ்டு மில்க்
- 1 ஏலக்காய்
- 1 மேஜைக்கரண்டி பாதாம்
- 1 மேஜைக்கரண்டி பிஸ்தா
- 1 மேஜைக்கரண்டி ஸ்ட்ராபெர்ரி சிரப்
- தேவையான அளவு சாக்லேட் சிரப்
- தேவையான அளவு ஐஸ் கியூப்
- தேவையான அளவு சர்க்கரை
செய்முறை
- முதலில் மாதுளம் பழத்தை உரித்து, பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அது நன்கு கொதித்து பொங்கி வரும் வரை அதை கொதிக்க வைக்கவும்.
- பால் நன்கு பொங்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்ட பின் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.
- 2 மணி நேரத்திற்குப் பிறகு பாலை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
- அடுத்து நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்திருக்கும் பாலில் இருந்து சிறிதளவு சேர்த்து அதனுடன் ஏலக்காய் மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்பு இந்த அரைத்த மாதுளை சாறை ஒரு வடிகட்டியில் ஊற்றி அரை பட்ட விதைகளை வடிகட்டி கொள்ளவும்.
- பிறகு வடிகட்டிய மாதுளை சாறை மீண்டும் அதே மிக்ஸி ஜாரில் ஊற்றி அதில் கண்டன்ஸ்டு மில்க், ஒரு scoop ஐஸ்கிரீம், மீதமுள்ள பால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஐஸ் கியூப்ஸ், மற்றும் ஸ்டாபெர்ரி சிரப்பை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு டம்ளரை எடுத்து அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாதுளை சாரை ஊற்றவும்.
- பின்னர் அதன் மேலே சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி அதன் மேலே ஒரு scoop ஐஸ்கிரீமை வைத்து அதன் மேலேயும் சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றவும். (ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஐஸ்கிரீமை நாம் தவிர்த்து விடலாம்.)
- கடைசியாக அதன் மேலே நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும். (தேனை விரும்புவர்கள் இதில் சிறிதளவு தேனையும் சேர்த்து கொள்ளலாம்.)
- இப்பொழுது உங்கள் ஆரோக்கியமான மற்றும் சில்லென்று இருக்கும் மாதுளை மில்க் ஷேக் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.