கோடை வெயிலுக்கு உடம்பு சோர்வடைவது மிகவும் இயல்பு தான். நாம் தான் உடல் சோர்வை சத்தான உணவு முறையோடு பழம் மற்றும் பழச்சாறுகளை பருகி உடம்பை தெம்பாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது இஞ்சி லெமன் ஜூஸ். இஞ்சி லெமன் ஜூஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெறும் எலுமிச்சம் பழம் மற்றும் இஞ்சியை மட்டுமே பயன்படுத்தி இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமும் இன்றி வீட்டிலேயே செய்து விடலாம்.
இதில் நாம் எலுமிச்சம் பழத்தை சேர்ப்பதனால் இவை உடம்பை குளிர்ச்சியாக்கும் மற்றும் இஞ்சியை சேர்ப்பதனால் உடம்பு வலியையும் போக்கும். அதனால் கோடை வெப்பத்திலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள எந்தவொரு செலவும் இன்றி உடம்புக்கு மிகவும் சத்தானபானம் என்றால் அது சந்தேகத்திற்கு இடமின்றி இஞ்சி லெமன் ஜூஸ் தான். மேலும் இதற்கு தேவையான சிரப்பை ஒரு முறை செய்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 10 லிருந்து 15 நாட்கள் வரை இதை அவ்வப்போது தேவைப்படும் போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஜூஸை எளிதாக கலந்து கொள்ளலாம்.
ஸ்கூலில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கோ அல்லது நாம் அலுவலகம் முடிந்து மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்தவுடனோ இதை நாம் வெகு எளிதாக ஒரு டம்ளரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து மற்றும் நாமும் பருகி நம் உடல் சோர்வை தகர்த்து விடலாம். மேலும் பழங்களையோ அல்லது மற்ற சத்தான உணவுகளையோ உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி பருகுவார்கள்.
இப்பொழுது கீழே இஞ்சி லெமன் ஜூஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
லெமன் இஞ்சி ஜூஸ்
தேவையான பொருட்கள்
- 14 எலுமிச்சம் பழம்
- 150 கிராம் இஞ்சி
- தேவையான அளவு சர்க்கரை
செய்முறை
- முதலில் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- அடுத்து அரைத்த இஞ்சியை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை சுமார் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
- இஞ்சி சாரு இருக்கும் பாத்திரம் ஆடாமல் இருப்பது அவசியம் அப்பொழுது தான் அதில் இருக்கும் சுண்ணாம்பு அடியில் தங்கும் அதை நாம் எளிதில் நீக்கி விடலாம்.
- இப்பொழுது எலுமிச்சம் பழங்களை எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு juicer ரின் மூலம் ஜூஸை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
- பின்பு அது எத்தனை ml இருக்கிறது என்பதை உறுதி செய்த பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் ஜூஸ்க்கு முக்கால் பாகம் தண்ணீர் என்ற கணக்கிர்க்கு தண்ணீரை அளந்து அதில் ஊற்றவும்.
- அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவையான அளவு சர்க்கரையை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கரைத்து விடவும். (சர்க்கரையை விரும்பாதவர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை சேர்த்து கொள்ளலாம்.)
- சர்க்கரை முழுவதும் கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
- இப்பொழுது நாம் இஞ்சி சாரை ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் இருக்கும் சாரை பக்குவமாக வேறு ஒரு பாத்திரத்தில் பொறுமையாக அதன் அடியில் இருக்கும் சுண்ணாம்பு இதனுடன் கலந்து வராமல் ஊற்றவும்.
- பின்னர் அதை மீண்டும் சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். (இரண்டாவது முறை இவ்வாறு செய்யும் செய்யும் போதும் சுண்ணாம்பு அதிகமாக அடியில் படிந்தால் அதை மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்து கொள்ளவும்.)
- அடுத்து இந்த சாரை வெது வெதுப்பாக இருக்கும் சர்க்கரை பாகில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பாகு நன்கு ஆறியவுடன் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் எலுமிச்சை சாரை வெளிய எடுத்து அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- பின்பு ஒரு டம்ளரை எடுத்து அதன் பாதி அளவிற்கு இந்த சிரப்பை ஊற்றி அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ் கியூபை போட்டு தண்ணியை ஊற்றி சில்லென்று பரிமாறவும்.
- மீதமுள்ள சிரப்பை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து இவ்வாறு ஜூஸை தயார் செய்து பருகலாம்.
- இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் சில்லென்று இருக்கும் இஞ்சி லெமன் ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.