கோடை வெயிலுக்கு சில்லென்று ஜூஸ்களை நாம் பருகுவது வழக்கம் தான். எனினும் ஒரே வகையான பழச்சாறுகளை தொடர்ச்சியாக நாம் பருகி வந்தால் அது நமக்கு சலித்து போவது இயல்பு தான். அதனால் இன்றைக்கு நாம் இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான ஆனால் மிகவும் அசத்தலாக இருக்கும் ரோஸ் மில்க் சர்பத். பொதுவாகவே கோடை காலங்களில் சர்பத்திற்கு ஒரு தனி மவுசு தான். இது போல் சர்பத்தை செய்து கொடுத்தால் அதனின் மவுசு இன்னும் கூடி விடும்.
சர்பத் 11 ஆம் நூற்றாண்டின் போதே Persia வில் உதயம் ஆனதாகவும் பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் போது முகலாயர்களின் இந்திய படையெடுப்பின் போது இந்தியாவில் மன்னர் பாபரால் பிரபலப்படுத்த பட்டதாக கூறப்படுகிறது. இன்றைக்கு சர்பத் ஈரான், துருக்கி, போஸ்னியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்காவில் ஒரு பிரபலமான குளிர்பானமாக இருக்கிறது. சர்பத்களில் பல வகை உண்டு. இதை வெவ்வேறு நாடுகளில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களை செய்து இதை மக்கள் சுவைக்கிறார்கள்.
ரோஸ் மில்க் சர்பத்தை நாம் பால், முந்திரி, பாதாம், பிஸ்தா, மற்றும் ஏலக்காய் தூள் போன்ற சத்தான பொருட்களை கொண்டு செய்வதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. இதை நாம் வெகு எளிதாக பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். மேலும் இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி பருகுவார்கள். அதனால் இன்றைக்கே இதை உங்கள் வீட்டில் செய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருக்கும் குட்டிஸ்சை அசத்துங்கள்.
இப்பொழுது கீழே ரோஸ் மில்க் சர்பத் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ரோஸ் மில்க் சர்பத்
தேவையான பொருட்கள்
- 1 லிட்டர் பால்
- 3 மேஜைக்கரண்டி சப்ஜா விதைகள்
- 2 மேஜைக்கரண்டி வெள்ளரி விதை
- 2 மேஜைக்கரண்டி முந்திரி
- 2 மேஜைக்கரண்டி பாதாம்
- 3 மேஜைக்கரண்டி பிஸ்தா
- 1 மேஜைக்கரண்டி பால் பவுடர்
- 1 சிட்டிகை ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
- தேவையான அளவு ரோஸ் சிரப்
- தேவையான அளவு சர்க்கரை
செய்முறை
- முதலில் சப்ஜா விதைகளை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்பு பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முந்திரி, பால் பவுடர், மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். (பாலில் ஆடை வராமல் இருப்பதற்கு அவ்வப்போது அதை கிண்டி கொண்டே இருக்கவும்.)
- பால் நன்கு கொதித்து பொங்கி வரும் போது அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு ஒரு கரண்டியின் மூலம் சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை அதை கிண்டி கொண்டே கொதிக்க விடவும்.
- 6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு மேஜைக்கரண்டியாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- மாவை முற்றிலுமாக சேர்த்த பின் அதை மீண்டும் கிண்டி கொண்டே சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அதை நன்கு ஆற விடவும்.
- பால் நன்கு ஆறியவுடன் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதைகளை எடுத்து அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரோஸ் சிரப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை பிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும்.
- 3 மணி நேரத்திற்கு பிறகு அதை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே சிறிதளவு பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் சில்லென்று இருக்கும் ரோஸ் மில்க் சர்பத் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.