பூரி இந்தியாவின் பாரம்பரியமான மற்றும் பலருக்கும் விருப்பமான ஒரு காலை நேர உணவு. குறிப்பாக இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. பூரி பொதுவாக சென்னா மசாலா, வெஜிடபிள் குருமா, காலிபிளவர் குருமா, மற்றும் கொத்துக்கறி போன்ற சைடிஷ்களுடன் தான் பரிமாறப்படுகிறது. என்ன தான் இது போன்று வித விதமான சைடிஷ்கள் இருந்தாலும் பூரி கிழங்கு காம்பினேஷன்க்கு கிடைக்கும் வரவேற்பே தனி தான்.
இந்தியாவை பிறப்பிடமாக கொண்டிருக்கும் இவை இன்று உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் பிரபலமடைந்து இருக்கிறது. பூரிகளில் பல வகை உண்டு. அதில் சோலா பூரி, மசாலா பூரி, பன்னீர் ஸ்டஃப்டு பூரி, தக்காளி பூரி, மற்றும் பீட்ரூட் பூரி குறிப்பிடத்தக்கவை. இவைகளில் பெரும்பான்மையானவை சமீப காலங்களில் உணவுப் பிரியர்களின் நாவின் சுவைக்கு விருந்தளிக்க உதயம் ஆனவை.
பூரியை பொதுவாக மக்கள் 2 விதமாக செய்கிறார்கள். வெறுமனே கோதுமை மாவை மட்டும் பயன்படுத்தியும் மற்றும் கோதுமை மாவுடன் சரி பாதி அளவு மைதா மாவையும் சேர்த்து செய்கிறார்கள். இரண்டுமே ஏறத்தாழ சுவையில் ஒன்றாகத்தான் இருக்கும். எனினும் கோதுமை மாவை மட்டும் வைத்து செய்யப்படும் பூரி மைதா மாவு கலந்து செய்யப்படும் பூரியை விட சிறிது மிருதுவாக இருக்கும்.
இப்பொழுது கீழே பூரி மற்றும் கிழங்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பூரி கிழங்கு
தேவையான பொருட்கள்
- 4 கப் கோதுமை மாவு
- 2 உருளைக்கிழங்கு
- 1 1/2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 இஞ்சி துண்டு
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலை மாவு
- 1/2 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக வைத்து எடுத்து மசித்து வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதனின் நிறம் சிறிது மாறும் வரை வறுக்கவும்.
- அதனின் நிறம் சிறிது மாறியதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்கும் வரை அதை வறுக்கவும்.
- கடுகு வெடித்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வதக்கவும்.
- அடுத்து இதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு கடலை மாவை தண்ணீரில் கரைத்து இதில் சேர்த்து அதனுடன் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.
- பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு இதில் சிறிது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது 4 கப் அளவு கோதுமை மாவை ஒரு bowl ல் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து மீண்டும் அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பூரி மாவை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு பிசைந்து கொள்ளவும். (மாவு நன்கு மிருதுவான பதம் வரும் வரை அதை பிசையவும்.)
- மாவு தொட்டால் கைகளில் ஒட்டக்கூடாது அப்படி ஓட்டினால் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அதில் சிறிதளவு மாவை தூவி பிசைந்து கொள்ளவும்.
- மாவை பிசைந்து முடித்ததும் அதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விடவும்.
- 20 நிமிடத்திற்கு பிறகு எடுத்து அதை அவரவர்க்கு ஏற்றவாறு சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோதுமை மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பூரியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுடுவதற்குல் நாம் சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் கோதுமை மாவை எடுத்து கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் கோதுமை மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.
- பின்னர் எண்ணெய் சுட்டதும் அதை கடாயில் பக்குவமாக போட்டு அது நன்கு உப்பி வந்ததும் அதை திருப்பி விட்டு பூரி வெந்ததும் அதை எடுத்து கரண்டியின் மூலம் எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே மீதமுள்ள அனைத்து பூரிகளையும் போட்டு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து நாம் செய்த வைத்திருக்கும் கிழங்குடன் சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பூரி மற்றும் கிழங்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
Poori Masala Recipe in English