தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு வகை. தோசையில் பல வகை உண்டு. அதில் பன்னீர் தோசை, ஆனியன் ரவா தோசை, ரவா தோசை, மற்றும் ஆனியன் தோசை மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த மசாலா தோசை. உணவுப் பிரியர்கள் மத்தியிலும் இதற்கு ஒரு தனி வரவேற்பு உண்டு. மசாலா தோசையை வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.
மசாலா தோசையிலேயே பல விதம் இருக்கிறது. அதில் பேப்பர் மசாலா தோசை, மெட்ராஸ் ஸ்பெஷல் மசாலா தோசை, கேரளா மசாலா தோசை, மற்றும் மைசூர் மசாலா தோசை குறிப்பிடத்தக்கது. மசாலா தோசை செய்வதற்கு சிறிது அதிகம் நேரம் பிடித்தாலும் மற்றும் நீண்ட செய்முறையை பின்பற்ற வேண்டியது இருந்தாலும் அருமையான மசாலா தோசையை உண்ணும் போது எந்த அலுப்பும் தெரியாது. ஏனென்றால் அதனின் சுவை அவ்வாறு. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா?
இப்பொழுது கீழே மசாலா தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மசாலா தோசை
தேவையான பொருட்கள்
- 1/2 கப் இட்லி அரிசி
- 1/2 கப் புழுங்கல் அரிசி
- 1/4 கப் உளுத்தம் பருப்பு
- 1/4 கப் அவல்
- 2 பெரிய வெங்காயம்
- 3 உருளைக்கிழங்கு
- 4 பூண்டு பல்
- 1 பச்சை மிளகாய்
- 8 காஞ்ச மிளகாய்
- 2 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்
- 3 மேஜைக்கரண்டி சீரகம்
- 1/4 மேஜைக்கரண்டி கடுகு
- 1/4 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.
- மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.
- மற்றொரு bowl ல் அவலை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.
- 3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.
- பருப்பு சிறிது அரைபட்டதும் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் அவலையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.
- 8 மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம், பூண்டு, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அதை நன்கு வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை high flame ல் வைத்து அதில் உருளைக்கிழங்கு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை அதை வேக வைத்து எடுத்து மசித்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு, கால் மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு, மற்றும் கால் மேஜைக்கரண்டி சீரகத்தை சேர்த்து கடுகு வெடிக்கும் போது அதில் பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை வறுக்கவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள ஒரு வெங்காயத்தையும் மற்றும் பச்சை மிளகாயையும் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
- பிறகு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.
- தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.
- தோசை ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விடவும்.
- பின்பு தோசையை திருப்பி போட்டு அதன் உள்புறத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை எடுத்து நன்கு தடவிய பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைத்து சுட சுட சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மசாலா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.