இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. குறுகிய நேரத்தில் சத்தான உணவு செய்வதாக இருந்தாலோ அல்லது உடம்பு குறைப்பதற்காக டயட்டில் இருந்தாலும் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் உணவுகள் தான் அவர்களின் பிரதான உணவாக இருக்கிறது. அந்த வகையில் இன்று இங்கு நாம் காண இருப்பது ஓட்ஸ் உப்புமா.
பொதுவாக ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது. அந்த வகையில் ஓட்ஸை கொண்டு செய்யப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவாக ஓட்ஸ் உப்புமா இருக்கிறது. மேலும் நாம் பொதுவாக செய்து உண்ணும் ரவை உப்புமா, அவல் உப்புமா, மற்றும் கோதுமை ரவை உப்புமாவுக்கு மாற்றாக ஓட்ஸ் உப்புமாவை செய்து நாம் சுவைக்கலாம்.
ஓட்ஸ் உப்புமாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை சமைக்க தெரியாதவர்கள் கூட வெகு எளிதாக செய்து விடலாம். இதில் நாம் ஓட்ஸ் மட்டுமின்றி பல காய்கறிகளையும் நாம் சேர்ப்பதனால் இவை உடம்பிற்கும் மிகவும் சத்தானது. அதனால் ஓட்ஸ் உப்புமாவை நம் குழந்தைகளுக்கும் ஒரு சத்தான மாலை நேர டிபன் ஆக நாம் செய்து கொடுக்கலாம்.
இப்பொழுது கீழே ஓட்ஸ் உப்புமா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ஓட்ஸ் உப்புமா
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ஓட்ஸ்
- 1/2 பெரிய வெங்காயம்
- 2 கேரட்
- 2 பீன்ஸ்
- 2 மேஜைக்கரண்டி பச்சை பட்டாணி
- 1 காஞ்ச மிளகாய்
- 1/2 மேஜைக்கரண்டி கடுகு
- 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1/4 மேஜைக்கரண்டி சீரகம்
- 1/2 துண்டு இஞ்சி
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஓட்ஸை கொட்டி அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வறுத்தெடுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதனுடன் கடலை பருப்பை போட்டு அது சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- கடலை பருப்பு சிறிது நிறம் மாறியதும் அதில் சீரகம் மற்றும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை சேர்த்து அதை வதக்கவும்.
- இஞ்சி வதங்கியவுடன் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கருவேப்பிலை, மற்றும் காஞ்ச மிளகாயை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் தூவி அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
- பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகள் பாதி அளவு வேகும் வரை அதை வேக விடவும்.
- காய்கறிகள் பாதி அளவு வெந்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் ஓட்ஸை சேர்த்து அதை சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வதக்கவும். (தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.)
- தண்ணீர் வற்றியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிதளவு தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சத்தான ஓட்ஸ் உப்புமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.