தேன் மிட்டாய் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மிட்டாய் வகை. தேன் மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசித்து ருசித்து உண்பார்கள். வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே நன்கு juicy ஆக இருப்பது தான் இதற்கு இருக்கும் அதீத வரவேற்புக்கான காரணம். தேன் மிட்டாய் தேனை பயன்படுத்தி செய்யப்படுவதில்லை. எனினும் அதனின் அதீத சுவையினாலேயே இவை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் இதனின் மவுசு சற்று குறைந்து இருக்கலாம் ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பாக பிறந்தவர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசே தனிதான். அந்த கால கட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மளிகை கடை மற்றும் பொட்டி கடைகளிலும் நாம் இந்த தேன் மிட்டாயை காண முடியும். தேன் மிட்டாய்களை வாங்கி உண்பதற்காகவே அந்த கால குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்கிறார்களோ இல்லையோ இந்தப் பெட்டி கடைகளில் தான் நிரம்பி வழிவார்கள்.
தேன் மிட்டாய் அந்த கால கட்டங்களில் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது என்றால் தேன் மிட்டாய் என்ற பெயரை அக்காலகட்டத்தில் பிறந்தவர்கள் கேட்டால் போதும் அவர்களின் குழந்தை பருவ ஞாபகங்கள் அவர்களின் நினைவுக்கு தானாக வந்து விடும். இன்றைக்கும் தேன் மிட்டாய்கள் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் போட்டு விற்கபடுகின்றது. ஆனால் அந்த கால கட்டங்களில் இருந்தது போன்ற சுவை இப்போது கிடைக்கும் தேன் மிட்டாய்களில் இருப்பதில்லை. அதனால் அந்த கால கட்டங்களில் கிடைத்த தேன் மிட்டாய்களின் சுவைகளை போன்றே இப்பொழுதும் அதே சுவையில் இவற்றை சுவைக்க நாம் வீட்டிலேயே இதை செய்யலாம்.
இப்பொழுது கீழே தேன் மிட்டாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தேன் மிட்டாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் இட்லி புழுங்கல் அரிசி
- 1/4 கப் உளுந்து
- 1 1/2 கப் சர்க்கரை
- 1 மேஜைக்கரண்டி ஜவ்வரிசி மாவு
- 1/4 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1 சிட்டிகை ஆரஞ்சு பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
- 1/2 எலுமிச்சம் பழம்
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- இப்பொழுது நாம் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, உளுந்து, மற்றும் ஜவ்வரிசியோடு ஒரு சிட்டிகை அளவு உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகமாக சேர்த்து விட கூடாது.)
- அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையை கொட்டி அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி விடவும்.
- சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அப்படியே அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு சரியாக ஒரு கம்பி பதத்தை எட்டியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அது மிட்டாய் உருண்டைகளில் இறங்காது. ஒரு வேளை சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அதில் மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க வைத்து சர்க்கரை பாகை ஒரு கம்பி பதத்திற்கு கொண்டு வரவும்.
- பின்பு இந்த சர்க்கரை பாகை அடுப்பிலிருந்து இறக்கி அதில் சுமார் 3 அல்லது 4 சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும். (எலுமிச்சை சாறை சேர்த்தால் சர்க்கரை பாகு கெட்டியாகாமல் இருக்கும்.)
- அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதில் ஆரஞ்சு பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு அதை நன்கு கலந்து கொள்ளவும். (அவரவருக்கு பிடித்தமான கலர் பவுடரையும் சேர்த்து கொள்ளலாம்.)
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேன் மிட்டாயை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் கையை தண்ணீரில் நனைத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறிது அளவு எடுத்து எண்ணெய்யில் சிறு சிறு உருண்டைகளாக போடவும்.
- கடாயின் அளவிற்கேற்ப உருண்டைகளைப் போட்டு அது அனைத்து புறங்களிலும் மொறு மொறுப்பாக வந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அப்படியே நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.
- சர்க்கரை பாகு நன்கு வெது வெதுப்பாக இருக்கும்போதே தேன் மிட்டாய்களை அதில் போட்டால் தான் அது நன்கு ஊரும்.
- 20 நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை பாகில் இருந்து தேன் மிட்டாய்களை எடுத்து சர்க்கரையில் உருட்டியோ அல்லது அப்படியேவும் பரிமாறலாம்.
- இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் மிகவும் சுவையான தேன் மிட்டாய் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.