இன்றைய தலைமுறையினருக்கு சாண்ட்விச் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. சாண்ட்விச்களில் பலவகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் பிரபலமானவை. இதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் சாண்ட்விச். இவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு.
இதை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். இதை செய்வதற்கும் வெகு நேரம் ஆகாது. மேலும் பன்னீர் உடம்புக்கு மிகவும் நல்லது என்பதால் இதை குழந்தைகளுக்கு எந்த வித ஒரு அச்சமுமின்றி கொடுக்கலாம்.
இப்பொழுது கீழே பன்னீர் சாண்ட்விச் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பன்னீர் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
- 400 கிராம் பன்னீர்
- தேவையான அளவு பிரெட்
- 1 1/2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 குடை மிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1/2 எலுமிச்சம் பழம்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி சாட் மசாலா
- 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்
- 1 கை புதினா
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு பட்டர்
- தேவையான அளவு சீஸ்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, மற்றும் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, இஞ்சி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 பல் பூண்டு மற்றும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், சாட் மசாலா, தனியா தூள், மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
- அடுத்து அந்த மசாலாவில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு அதை நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு கிண்டி விட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும். (பன்னீரை முன்பாகவே நறுக்கி வைத்தால் அதில் தண்ணீர் விடும் அதனால் நாம் செய்யும் போது நறுக்கிப் போட்டால் நல்லது.)
- 5 நிமிடத்திற்கு பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதன் மேலே தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அடுத்து 2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னியை அதன் மேலே தடவி விடவும்.
- பின்னர் ஒரு பிரெட்டில் பன்னீர் ஸ்டாப்பிங்கை வைத்து அதன் மேலே அவரவர் விருப்பத்திற்கேற்ப சீஸை துருவி போட்டு மற்றொரு பிரட்டை அதன் மேலே வைக்கவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு பட்டரை போட்டு அதை உருக விடவும்.
- பட்டர் உருகியதும் அதை நன்கு pan ல் தடவி விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அது வெந்து கொண்டிருக்கும் போதே மேலே உள்ள பிரடடில் சிறிதளவு பட்டரை தடவி ஒரு புறம் வெந்ததும் சாண்ட்விச்சை மறு புறம் பக்குவமாக திருப்பி வைக்கவும்.
- பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து அப்படியே சுட சுட ஒரு தட்டில் வைத்து கெட்ச்சப்புடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் கிறிஸ்பியான பன்னீர் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.