பாஸ்தா என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக மற்றும் பல உணவுப் பிரியர்கள் விரும்பி உண்ண கூடியதாக இருக்கும் ஒரு உணவு. இவை என்ன தான் இத்தாலிய சமையல் முறையை சார்ந்ததாக இருந்தாலும் உலகம் முழுவதும் இதற்கென ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு இருக்கிறது. இத்தாலிய நாட்டில் உதயமான இவை இதனின் அதீத சுவையாலும் மற்றும் எளிமையான செய்முறையாலும் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பிரபலம் அடைய துவங்கியது.
பாஸ்தாவிற்கு மிக நீண்ட நெடிய வரலாறு உண்டு. இவை ஒன்றாம் நூற்றாண்டின் போதே இன்றைக்கு இத்தாலி ஆக இருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் உணவு முறையில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தாலிய மக்களின் பாரம்பரிய உணவாக இருப்பதினால் இன்றைக்கும் உலகில் அதிகமாக பாஸ்தா உண்னும் நாடாக இத்தாலியே திகழ்கிறது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு இத்தாலி நாட்டில் வாழும் ஒரு நபர் சுமார் 27 கிலோ பாஸ்தாவை உண்பார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.
இன்றைக்கு பாஸ்தாவின் சுவைக்கு மிக முக்கியமான மூலப்பொருள் ஆக கருதப்படுவது தக்காளி சாஸ். ஆனால் ஆரம்ப கால கட்டங்களில் பாஸ்தாவை வெறுமென plain ஆகதான் சுவைத்து இருக்கிறார்கள். சில உணவு வல்லுனர்கள் பாஸ்தாவின் சுவையை அதிகரிக்க தக்காளி சாஸ்சை சேர்த்ததினால் தான் இவை உலகம் முழுவதும் பலரிடமும் சென்றடைந்து இருப்பதற்கான காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்பொழுது கீழே இந்தியன் ஸ்டைல் பாஸ்தா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
இந்தியன் ஸ்டைல் பாஸ்தா
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் பாஸ்தா
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2 கப் கேரட்
- 1/2 கப் பீன்ஸ்
- 1 குடை மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- தேவையான அளவு மிளகாய் தூள்
- 1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். (பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காகவே நாம் எண்ணெய்யை சேர்க்கிறோம்.)
- பின்பு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு அதை அவ்வப்போது வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். (பொதுவாக இவை வேகுவதற்கு சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை ஆகும்.)
- பாஸ்தா வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஓரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், மற்றும் குடை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, சீரக தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி மீண்டும் மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து அதை நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விடவும்.
- பின்பு இதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு தக்காளி சாஸ்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி அதை சுட சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.
- இப்போழது உங்கள் சூடான மற்றும் சுவையான இந்தியன் ஸ்டைல் பாஸ்தா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.