உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. இதில் நாம் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி போன்ற பல விதமான காய்கறிகளையும் சேர்ப்பதனால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது.
சேமியா உப்புமா செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தயார் செய்து விட்டால் இதை வேகு சுலபமாக செய்து விடலாம். இதனாலேயே இதற்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவசரமான காலை பொழுதில் ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைக்கு மற்றும் அலுவலகத்துக்கு செல்லும் கணவருக்கு வெகு எளிதாக குறைந்த நேரத்திலேயே ஒரு சத்தான உணவை செய்து விடலாம் என்றால் இருக்காதா என்ன?
இப்பொழுது கீழே சேமியா உப்புமா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சேமியா உப்புமா
தேவையான பொருட்கள்
- 1 கப் சேமியா
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 6 to 7 பின்ஸ்
- 2 கேரட்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 1 பச்சை மிளகாய்
- 5 to 6 முந்திரி
- 1 துண்டு இஞ்சி
- 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1/2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 5 வெந்தயம்
- 1/4 மேஜைக்கரண்டி சீரகம்
- 1/4 மேஜைக்கரண்டி கடுகு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, இஞ்சி, மற்றும் பச்சை மிளகாயை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் சேமியாவை போட்டு அதை பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் சீரகத்தை போட்டு அதை வறுக்கவும்.
- அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி, மற்றும் இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 5 நிமிடம் வரை காய்கறிகள் நன்கு வெந்து தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.
- பின்பு சேமியா வெந்து தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை அப்படியே அடுப்பில் வேக விடவும்.
- சேமியா நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சேமியா உப்புமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Recipe in English can be found here