தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் உருளைக்கிழங்கு போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இதை ரெஸ்டாரன்ட்களில் மட்டுமின்றி சிறு சிறு கடைகளிலும் கூட மாலை நேரங்களில் சுட சுட பொரித்தெடுத்து உணவுப் பிரியர்களுக்கு பரிமாறுவதை தினம் தோறும் நாம் காணலாம். இதற்கு அந்த அளவிற்கு மிகவும் வரவேற்பு உண்டு.
உருளைக்கிழங்கு போண்டா பெரும்பாலும் தேங்காய் சட்னியுடனோ அல்லது புதினா சட்னியுடனோ தான் பரிமாறபடுகிறது. என்ன தான் தென்னிந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இவை வட இந்தியாவிலும் மிகவும் பிரபலம். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. இவை மராட்டிய மொழியில் Batata Vada என்றும் ஹிந்தி மொழியில் Aloo Bonda என்றும் அழைக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு போண்டாவை பெரும்பாலும் விரும்பி உண்ணுபவர்கள் கடைகளிலேயே தான் வாங்கி இதை சுவைக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் health conscious ஆக இருப்பவர்கள் கடைகளில் என்ன எண்ணெய்யில் மற்றும் பொருட்களை கொண்டு இதை செய்கிறார்கள் என்ற ஒரு அச்ச உணர்வு இருக்கலாம். அதனால் இதை வீட்டிலேயே இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்தால் எந்த ஒரு அச்சமுமின்றி குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு
- 3 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 மேஜைக்கரண்டி கடுகு
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
- 1 சிட்டிகை பேக்கிங் சோடா
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- பின்பு உருளைகிழங்கை அதில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக வைத்து எடுத்து மசித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்கும் வரை அதை தாளிக்கவும்.
- கடுகு வெடித்த பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு வதக்கவும்.
- அடுத்து அதில் கொத்தமல்லி, மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மசாலாவை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
- மசாலா ஆறுவதற்குள் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப சைசில் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சுட்டில் அடுப்பில் வைத்து அதில் போண்டாவை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கும சாலாவை போண்டா மாவில் நன்கு முக்கி எண்ணெயில் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொன்னிறம் ஆனதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட சட்னியுடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.