மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது. இன்று இந்தியாவில் இவை கிடைக்காத காபி மற்றும் டீ ஷாப்புகளே கிடையாது எனும் அளவிற்கு மசாலா பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழில் மசாலா பால் என்று அழைக்கப்படும் இவை வட இந்திய மாநிலங்களில் ஹிந்தியில் மசாலா சாய் என்று அழைக்கப்படுகிறது. மசாலா சாய்க்கு என்று அங்கு ஒரு தனி மவுசு உண்டு. இந்தியாவில் உதயமான இவை மெல்ல மெல்ல இந்தியர்கள் குடிபெயர்ந்த நாடுகளிலும் பிரபலமடைந்து விட்டது.
மசாலா பாலில் இஞ்சி, பட்டை, ஏலக்காய், மஞ்சள் தூள், மற்றும் கிராம்பு சேர்ப்பதனால் இவை சாதா பால் மற்றும் காபியை விட உடம்புக்கு மிகவும் நல்லது. இதை இரவு நேரங்களில் பருகினால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் கூட நன்கு தூங்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது கீழே மசாலா பால் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மசாலா பால்
தேவையான பொருட்கள்
- 1 கப் பால் (400 ml)
- 1/4 கப் சர்க்கரை
- 15 முந்திரி
- 15 பாதாம்
- 10 பிஸ்தா
- 2 மேஜைக்கரண்டி சாரை பருப்பு
- 1/2 மேஜைக்கரண்டி குங்கும பூ
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 துண்டு இஞ்சி
- 2 துண்டு பட்டை
- 3 ஏலக்காய்
- 4 கிராம்பு
செய்முறை
- முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தா, மற்றும் சாரை பருப்பை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதில் முந்திரி மற்றும் பாதாமை போட்டு சுமார் 15 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் பாலை ஊற்றி அதனுடன் பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பு சேர்த்து அதை சுட வைக்கவும்.
- பாலை அவ்வப்போது கிண்டி விடவும். பாலை எவ்வளவுக்கு எவ்வளவு நாம் வற்ற வைக்கிறோமோ அந்த அளவிற்கு மசாலா பாலின் சுவை நன்றாக இருக்கும். (400 ml அளவு நாம் பாலை எடுத்தோம் என்றால் அதை சுமார் 300ml அல்லது 250 ml வரை வற்ற விடலாம்.)
- பால் வெது வெதுப்பான பதத்திற்கு வந்ததும் அதில் ஒரு துண்டு இஞ்சியை தட்டி போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது இந்த பாலில் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பாலை வற்ற விடவும். (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேவைப்பட்டால் இன்னும் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ளலாம்.)
- பால் தயாராவதற்குல் நாம் ஊற வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாமை எடுத்து அதன் தோலை உரித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இந்த பாலில் இருந்து சுமார் 3 அல்லது 4 மேஜைக்கரண்டி அளவு பாலை சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் பாலை ஒரு கிண்டு கிண்டி நாம் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.
- சிறிது நேரத்திற்கு பிறகு அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவையான அளவு சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக பாத்திரத்தை சுத்தி சேர்த்து அதை நன்கு கரையும் வரை கிண்டி விடவும்.
- அடுத்து இந்த பாலில் நாம் சேர்த்த பட்டை, ஏலக்காய், இஞ்சி, மற்றும் கிராம்பை ஒரு ஜல்லி கரண்டியின் மூலமோ அல்லது ஒரு சிறிய சைஸ் பில்டர் மூலமோ பாலில் இருந்து எடுத்து விடவும்.
- பின்பு இந்த பாலில் அரை மேஜைக்கரண்டி அளவு குங்கும பூவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதை அப்படியே அடுப்பில் சுமார் 5 நிமிடம் வரை வைத்து நன்கு ஆடை வரும் அளவிற்கு அதை கொதிக்க விடவும்.
- 5 நிமிடத்திற்குப் பிறகு ஆடை வந்ததும் மசாலா பாலை சுட சுட ஆடையோடு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாதாம், முந்திரி, பிஸ்தா, மற்றும் சாரை பருப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து நன்கு ஒரு கலக்கு கலக்கி பரிமாறவும்.
- இப்பொழுது சுடான, மிகவும் சுவையான, மற்றும் உடம்பிற்கு இதமான மசாலா பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.