பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இதை செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் என்றும் அழைக்கின்றார்கள். இவை தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு ஒரு அசத்தலான சைடிஃஷ். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணபடுகிறது. இவை ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ஐ போன்றே வெளியே crispy ஆகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
செட்டிநாடு வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
- 2 வாழைக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 எலுமிச்சம் பழம்
- 1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 6 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்
- 1/2 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 துண்டு பட்டை
- சிறிதளவு கருவேப்பிலை
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நெய்
செய்முறை
- முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- பின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்த வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.
- சோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.
- 5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.