தோசை தமிழர்களின் ஒரு பாரம்பரியமான உணவு வகை. இவை தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. தோசை தான் தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை டிபன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி, மற்றும் பருப்புப் பொடியுடன் தான் சேர்த்து பரிமாறப்படுகிறது. தோசையில் பல வகை உண்டு. அதில் பிளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை மிகவும் பிரபலமானவை.
என்ன தான் இவை தமிழகத்தில் உருவாகி இருந்தாலும் இவை இந்தியா முழுவதும் பிரபலமடைந்து இருக்கிறது. இவை எந்த அளவுக்கு பிரபலம் அடைந்து இருக்கிறது என்றால் இவை கிடைக்காத தென்னிந்திய உணவகங்களை இந்தியா முழுவதும் காண முடியாது எனும் அளவிற்கு. அது மட்டுமின்றி இவை அமெரிக்காவிலும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக ஆகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
ரவா தோசை ஒரு ஸ்பெஷலான தோசை வகை. இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் சாதா தோசையை போன்று இதை செய்வதற்கு தேவையான மாவை தயார் செய்வதற்கு நீண்ட செய்முறை கிடையாது. அதனால் வெகு எளிதாக வெறும் அரை மணி நேரத்திலேயே ரவா தோசை செய்வதற்கு தேவையான மாவை நாம் தயார் செய்து விடலாம். தயார் செய்த பின் உடனடியாக தோசையையும் ஊற்றி சுவைக்கலாம்.
இப்பொழுது கீழே ரவா தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ரவா தோசை
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி மாவு
- 1 கப் ரவை
- 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
- 2 மேஜைக்கரண்டி தயிர்
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 8 to 10 முந்திரி
- 1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- 1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்
- 1/4 மேஜைக்கரண்டி எள்
- 1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை
- 1 கை அளவு கொத்தமல்லி
- 1 கை அளவு கருவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.
- மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
- 20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.
- பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.
- தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.
- ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.
- அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)
- தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.