ஆட்டுக்கால் சூப் இந்தியாவில் ஒரு பிரபலமான சூப் வகை. இந்தியா மட்டுமின்றி இவை வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் மிகவும் பிரபலம். இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் ஆட்டுக்கால் சூப்புக்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு அந்தளவுக்கு இவை பிரபலம். ஆட்டுக்கால் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதை பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.
இந்த நவீன காலகட்டத்தில் பிரஷர் குக்கரில் போட்டு மிக எளிதாக ஆட்டுக்கால் சூப்பை செய்து விடுகிறார்கள். ஆனால் ஆதி காலங்களில் மண் பானை வைத்து தான் இந்த ஆட்டுக்கால் சூப் செய்ய முடியும். அவ்வாறு இருக்கையில் இந்த வலிமையான ஆட்டுக்காலை வேக வைக்க slow cooking என்ற முறையில் தான் செய்வார்கள். இந்த ஆட்டுக்காலை நன்கு கழுவி இரவிலேயே அடுப்பில் வேக வைத்து விடுவார்கள். மறுநாள் காலை வரை இது வெந்து கொண்டே இருக்கும் அதற்குத் தேவையான எரி பொருளையும் அடுப்பில் போட்டு விடுவார்கள். இது மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரசியமான சமையல் முறை தான்.
இப்பொழுது கீழே ஆட்டுக்கால் சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ஆட்டுக்கால் சூப்
Ingredients
- 4 ஆட்டுக்கால்
- 2 தக்காளி
- 15 to 20 சின்ன வெங்காயம்
- 3/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 மேஜைக்கரண்டி மிளகு
- 5 சிவப்பு மிளகாய்
- 1 1/2 மேஜைக்கரண்டி தனியா
- 1 இஞ்சி துண்டு
- 14 பூண்டு பல்
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 பட்டை துண்டு
- 2 கிராம்பு
- 1 நட்சத்திர பூ
- கொத்தமல்லி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் ஆட்டுக்காலை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 5 சிவப்பு மிளகாய், ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு தனியா, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, மற்றும் 2 மேஜைக்கரண்டி மிளகு சேர்த்து அதை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
- நன்றாக வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, ஒரு நட்சத்திர பூ, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் 14 பல் பூண்டு சேர்த்து அந்த சூட்டிலேயே சிறிது வறுத்து அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்திருக்கும் ஆட்டுக் கால்களை போடவும்.
- அதனுடன் முக்கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சுமார் 10 லிருந்து 12 விசில் வரும் வரை அதை வேக விடவும்.
- ஆட்டுக்கால் வேகுவதற்க்குள் நாம் வறுத்து எடுத்து ஆற வைத்திருக்கும் மசாலா பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
- 12 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே சிறிது நேரம் வைக்கவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
- பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிதளவு அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- மசாலா கொதிக்க ஆரம்பித்ததும் அதை குக்கரில் இருக்கும் ஆட்டுக்கால் உடன் ஊற்றி நன்கு கலந்து சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை அதை கொதிக்க வைக்கவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
- 12 நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்புக்கு மிகவும் சத்தான ஆட்டுக்கால் சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.