பொதுவாக சப்பாத்தி அல்லது நான்னுக்கு சிக்கன் பட்டர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, அல்லது வெஜிடபிள் குருமா இது போன்று சைடிஷ்களை தொட்டு உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு இவைக்கு மாற்றாக சுவையான முட்டை கிரேவி செய்து சுவைக்கலாம். முட்டை கிரேவி தோசை மற்றும் பூரிக்கும் தொட்டு உண்ண உகந்தது. இவை செய்வதற்கும் மிக எளிமையானவை என்பதால் இதை வெகு சுலபமாக காலை நேர டிபனுக்கு கூட செய்து விடலாம். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை குழம்பாகவும் சாதத்தில் ஊற்றி உண்ணலாம்.
இப்பொழுது கீழே முட்டை கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
முட்டை கிரேவி
Ingredients
- 3 மூட்டை
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 4 முந்திரி
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 3 பட்டை துண்டு
- 3 கிராம்பு
- 2 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 இஞ்சி துண்டு
- 2 பூண்டு பல்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
- 2 ஏலக்காய்
- 1 மேஜைக்கரண்டி கசகசா
- மிளகாய் தூள் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 எலுமிச்சம் பழம்
Instructions
- முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, தேங்காயைத் துருவி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆக்கி, எலுமிச்சைச் சாரை தயார் செய்து, முட்டையை வேக விட்டு எடுத்து வைத்து, மற்றும் கசகசாவை சுமார் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் மஞ்சள் தூள், அரை மேஜைக்கரண்டி மிளகாய் தூள், மற்றும் கால் மேஜைக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் முட்டைகளில் செங்குத்தாக கோடுகளைப் போட்டு சேர்த்து நன்கு முட்டை மசாலாவொடு ஒட்டுமாறு பிரட்டி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- முட்டையை அதிக நேரம் வறுத்து விடக்கூடாது. அப்படி வறுத்தால் முட்டை திடம் ஆகி விடும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் 2 துண்டு பட்டை, 2 கிராம்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் சிறிதளவு கருவேப்பிள்ளை, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அதில் சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், ஒரு மேஜைக்கரண்டி கரம் மசாலா, மற்றும் தனியா தூள் சேர்த்து சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடம் ஆனதும் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை முற்றிலுமாக குறைத்து சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடம் ஆவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் தேங்காய், ஒரு துண்டு பட்டை, ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, ஊற வைத்திருக்கும் கசகசா, ஏலக்காய், மற்றும் முந்திரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது இந்த அரைத்த தேங்காயை அடுப்பில் இருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும். (தேவைப்பட்டால் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
- 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட்டு சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு அதில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.