பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அல்வா என்றாலே திருநெல்வேலி மாவட்டம் தான் அனைவரது சிந்தனையிலும் வரும். ஆனால் திருநெல்வேலிக்கு பேர் போனது கோதுமை கொண்டு செய்யப்படும் கோதுமை அல்வாவே.
அல்வாக்ளில் பல வகை உண்டு. அதில் கோதுமை அல்வா, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா, பூசணிக்காய் அல்வா, பேரிச்சம்பழம் அல்வா குறிப்பிடத்தக்கது. இதில் இங்கு நாம் காணவிருப்பது கேரட் அல்வா. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை தீபாவளி, ஹோலி, ரக்ஷா பந்தன், மற்றும் ஈத் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் செய்து உண்கின்றார்கள். இவை குறிப்பாக பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று பஞ்சாபியர்கள் அழைக்கின்றார்கள்.
இந்தியாவை தவிர இவை வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலம். வெவ்வேறு இடங்களில் இவை சிறு சிறு செய்முறை மாற்றத்தோடு செய்யப்படுகிறது. சில இடங்களில் பாலை சுட வைத்து அதில் கேரட்டை போட்டும், சில இடங்களில் பாலுக்கு பதிலாக பால் கோவாவை கேரட்டோடு சேர்த்து கேரட் அல்வாவை செய்கிறார்கள். இரண்டுமே ஏறத்தாழ ஒரே சுவையில் தான் இருக்கும். பாலுக்கு பதிலாக பால் கோவாவை போட்டு செய்தால் வெகு நேரம் எடுக்காமல் மிக எளிதாக இதை செய்து விடலாம்.
இப்பொழுது கீழே கேரட் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கேரட் அல்வா
Ingredients
- 3 கப் துருவிய கேரட்
- 1 கப் சர்க்கரை தலை தட்டி
- 1/4 கப் பால் கோவா
- 1/2 கப் நெய்
- 1 மேஜைக்கரண்டி உலர் திராட்சை
- 1 மேஜைக்கரண்டி முந்திரி
- 1 மேஜைக்கரண்டி பாதாம்
- 1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் கேரட்டை நன்கு பொடியாக துருவி, முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி, ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து முந்திரி லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் பொடியாகத் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு நன்கு கிளறி அதன் பச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)
- கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.
- அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.
- மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.