சப்பாத்திகள் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியையே வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது. இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்திக்கு என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது.
சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி வெஜ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம். இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. பொதுவாகவே சப்பாத்திகள் உடம்பிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நபர்களுக்கு மருத்துவர்கள் இரவு நேரங்களில் சப்பாத்திகளை உண்ண அறிவுறுத்துவார்கள். சப்பாத்தி வெஜ் ரோலில் காய்கறிகளையும் சேர்த்து செய்வதினால் இவை மேலும் சத்தானதாகின்றன.
இப்பொழுது கீழே சப்பாத்தி வெஜ் ரோல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
சப்பாத்தி வெஜ் ரோல்
Ingredients
- 3 கேரட்
- 2 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 8 to 10 பீன்ஸ்
- 1 குடை மிளகாய்
- 1 தக்காளி
- 1 கப் மைதா மாவு
- 1 கப் கோதுமை மாவு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- கெட்சப் தேவையான அளவு
- மிளகாய் தூள் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் பீன்ஸ், கேரட், குடை மிளகாய், வெங்காயம், மற்றும் உருளைக்கிழங்கை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் சிறிதளவு உப்பை ஒன்றாக போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிணைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும்.
- பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து அதில் பீன்ஸ் மற்றும் கேரட்டை போட்டு வதக்கவும்.
- பின்னர் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
- காய்கறிகள் வெந்ததும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
- இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து சப்பாத்திகளை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளில் ஒவ்வொன்றாக கெட்ச்சப்பை தடவி செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை சப்பாத்தியின் நடுவில் வைத்து உருட்டிக் கொள்ளவும்.
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி வெஜ் ரோல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.