ரவா கிச்சடி தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான ஒரு உணவு வகை. பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் அல்லது பண்டிகை காலங்களில் ஒரு சிறப்பு உணவாக இது செய்யப்படுகிறது. இதை சாதாரண நாட்களிலும் காலை நேர மற்றும் மாலை நேர டிஃபனாக செய்து விரும்பி உண்கிறார்கள். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் சமைக்கவே தெரியாதவர்கள் கூட இதை சுலபமாக செய்து விடலாம். இவை செய்வதற்கு சுலபமானது மட்டுமின்றி பல காய்கறிகளை சேர்ப்பதனால் சத்தானதும் கூட. காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி கிச்சடியோடு சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இப்பொழுது கீழே ரவா கிச்சடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ரவா கிச்சடி
Ingredients
- 1 கப் ரவை
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 3 பீன்ஸ்
- 1 கேரட்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1/2 துண்டு இஞ்சி
- 3 பூண்டு பல்
- 3 பச்சை மிளகாய்
- 2 பட்டை துண்டு
- 8 to 10 முந்திரி
- 1 பிரியாணி இலை
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
Instructions
- முதலில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் ரவையை போட்டு வறுத்து அடுப்பிலிருந்து இறக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். (ரவையை நிறம் மாறாமல் வறுப்பது அவசியம்.)
- அடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை, பட்டை, சோம்பு மற்றும் முந்திரியை போட்டு வதக்கவும்.
- பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறுதளவு கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை இதனுடன் சேர்த்து சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- அடுத்து அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
- காய்கறிகள் வெந்ததும் அதில் மேலும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பின் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக கட்டி தட்டாமல் கிளறி விடவும்.
- தண்ணீர் வற்றும் வரை அதை வதக்கவும். தண்ணீர் வற்றியதும் அதில் ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலே வைத்து சிறிது முந்திரிகளை அதன் மேலே தூவி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ரவா கிச்சடி தயார்.
- இந்த சத்தான ரவா கிச்சடியை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter
Rava Kichadi recipe in English