பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை. எந்த அளவிற்கு என்றால் இவை இல்லாத ஓட்டல் மெனுக்களே இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு பிரபலமானவை. ஒரு கணக்கெடுப்பின்படி இரவு நேரங்களில் உணவு விடுதிகளில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளில் பன்னீர் பட்டர் மசாலா முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன. இவை 1950 களில் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றியவை. பஞ்சாபியர்களின் உணவு பழக்கங்களில் பன்னீர் தவிர்க்க முடியாதது, அதில் குறிப்பாக பாலக் பன்னீர், பஞ்சாபி மட்டர் பன்னீர், ஷாகி பன்னீர் ஆகியவை குறிப்பிடத்தக்கது. பஞ்சாபியர்களின் தாபாக் களிலும் பன்னீரே ஆதிக்கம் செலுத்துகின்றன.
பன்னீர் பட்டர் மசாலா வட இந்தியா முழுவதும் பிரபலமடைந்து இருந்தாலும், தென்னிந்தியாவிலும் உணவு பிரியர்கள் மத்தியில் இவற்றுக்கு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக பன்னீர் பிரியர்கள் மத்தியில் பன்னீர் பட்டர் மசாலா நான் காம்பினேஷன் டாப் சாய்ஸ் ஆக உள்ளது. இவை பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. இவை செய்வதற்கும் எளிமையாக இருப்பதினால், இதை பெரும்பாலானோர் வீட்டிலேயே செய்து உண்டு மகிழ்கின்றனர். பன்னீரை வைத்து செய்யப்படும் உணவு வகைகளில் பன்னீர் பட்டர் மசாலாவிற்கே முதலிடம்.
வெறும் 30 நிமிடங்களிலேயே செய்து முடித்து விடக்கூடிய இந்த பன்னீர் பட்டர் மசாலாவில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சேர்க்கப்படும் பன்னீரில் தசைகளுக்கு வலு சேர்க்க கூடிய புரதச்சத்தும், எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடிய கால்சியம் சத்தும், மற்றும் பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் டி ஆகிய சத்துகள் இதில் அடங்கியிருக்கின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதில் விட்டமின் பி இருப்பதினால் குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கிறது. இதில் கலோரிகள் அதிகம் அடங்கியிருப்பதால் இளம் வயதினரின் உணவு பழக்கங்களில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆயினும் ஆஸ்துமா, அலர்ஜி நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பன்னீர் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இப்பொழுது கீழே பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பன்னீர் பட்டர் மசாலா
Ingredients
- 250 கிராம் பன்னீர்
- 1 கப் வெண்ணெய்
- 1 1/2 வெங்காயம்
- 4 தக்காளி
- 1 துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 6 to 8 முந்திரி
- 1 பிரியாணி இலை
- 2 ஏலக்காய்
- 1 பட்டை
- 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- மிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப
- உப்பு தேவையான அளவு
- கசூரி மேத்தி சிறிதளவு
- 1 மேசைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீம்
Instructions
- அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை மேசைக்கரண்டி வெண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
- வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், மற்றும் 8 முந்திரிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- தக்காளி மென்மையாக வதங்கும் வரை கடாயை ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும்.
- பின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறியவுடன் வதக்கிய இந்த வெங்காயம் தக்காளியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு pan ஐ அடுப்பில் வைத்து 4 மேசைக்கரண்டி வெண்ணெய்யை அதில் ஊற்றவும்.
- வெண்ணெய் உருகிய உடன் அதில் பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, ஒரு பிரியாணி இலையை போடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை அதில் ஊற்றவும்.
- பின்பு அதில் ஒன்றரை மேசைக்கரண்டி கரம் மசாலா உடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போடவும். இறுதியாக உப்பை சேர்க்கவும்.
- இந்த கிரேவியை நன்கு கிளறி மூடி வைக்கவும். ஏழிலிருந்து எட்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும்.
- அதற்குள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு pan ஐ திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் பன்னீரை போட்டு கலந்து கொள்ளவும்.
- பிறகு சிறிது கசூரி மேத்தி எடுத்து கசக்கி கிரேவி மீது தூவவும்.
- கிரேவியை இறக்கும் முன்பு ஒரு மேஜைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இப்பொழுது நீங்கள் விரும்பிய சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
- இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter
Paneer Butter Masala Recipe in English can be seen here