சாக்லேட் பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த சாக்லேட் பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். இவை சதுர வடிவிலும், செவ்வக வடிவிலும், மற்றும் வட்ட வடிவிலும் செய்யப்படுகின்றன. ஆரம்ப காலகட்டங்களில் பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இவை பிற்காலங்களில் இவைகளின் அதீத சுவையினால் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல் பலர் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டியாக மாறின.
இந்த பிரவுனிகள் முதல் முதலாக அமெரிக்காவில்19ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டங்களின் போது தோன்றின. மெல்ல மெல்ல இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் கனடாவிலும் பிரபலமடைந்தன. காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் இருக்கும் பல மக்களின் மிகவும் பிடித்த உணவு வகைகளில் இடம் பிடித்தன. வெவ்வேறு நாடுகளில் இவை வெவ்வேறு செய்முறைகளோடு வெவ்வேறு விதமாக செய்யப்படுகின்றன. சில பகுதிகளில் சாக்லேட்க்கு பதிலாக சாக்லேட் பவுடர் கொண்டும், நட்ஸ்க்கு பதிலாக சாக்லேட் சிப்ஸ்களைக் கொண்டும், மற்றும் சில இடங்களில் க்ரீம் சீஸ் சேர்த்தும், சில இடங்களில் சேர்க்காமலும் செய்யப்படுகின்றன.
சாக்லேட் பிரவுனிகள் பெரும்பாலும் ஐஸ்கிரீம்களோடு சேர்த்து பரிமாறப்படுகின்றன. இந்த காம்பினேஷன் இன்றைய தலைமுறையினர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சாக்லேட் பிரவுனிகளின் பதம் சிறுது அளவு மாறினாலும் உண்ண உகந்ததாக இருக்காது. இதனாலேயே இவைகளை பெரும்பாலும் உணவுப் பிரியர்கள் ரெஸ்டாரன்ட்கள் மற்றும் காபி ஷாப்புகளிலேயே உண்டு மகிழ்கின்றனர். ஆனால் இவைகளை வீட்டிலேயும் அதே சுவையில் செய்யலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை கவனமாக பின்பற்றினால் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் மற்றும் காபி ஷாப்புகளில் கிடைக்கும் சாக்லேட் பிரவுனிகளின் அசத்தலான சுவைகளை போலவே செய்யலாம்.
சாக்லேட் பிரவுனி
Ingredients
- 200 கிராம் குக்கிங் சாக்லேட்
- 115 கிராம் பட்டர்
- 200 கிராம் சர்க்கரை
- 120 கிராம் மைதா
- 3 முட்டை
- 2 மேஜைக்கரண்டி கோக்கோ பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
- 1 மேஜைக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
- 1/4 கப் முந்திரி & பாதாம்
- பட்டர் பேப்பர் தேவையான அளவு
Instructions
- முதலில் குக்கிங் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் தீயை மிதமான சூட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
- பின்பு ஒரு சிறிய பாத்திரமோ அல்லது கிண்ணமோ எடுத்துக்கொண்டு அதில் குக்கிங் சாக்லேட்டை போட்டு கொதிக்கும் தண்ணீர் மேல் வைக்கவும். (இதுதான் டபுள் பாய்லிங் முறை).
- இப்போது குக்கிங் சாக்லேட் உடன் வெண்ணெய் சேர்க்கவும். சாக்லேட்டும் வெண்ணெய்யும் சிறிது உருகியவுடன் இடிக்கியால் கிண்ணத்தை பிடித்துக் கொண்டு அதை ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும்.
- இப்போது அந்தப் பாத்திரத்தை வெளியே எடுத்து உருகிய சாக்லேட் வெண்ணெய் கலவையை வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
- பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி அதை சிறிது நேரம் ஆறவிடவும்.
- இந்த சாக்லேட் வெண்ணெய் கலவை ஆறுவதற்குள் ஒரு பௌலை எடுத்து அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- பின்பு இந்த சாக்லேட் வெண்ணெய் கலவை நன்கு ஆறியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
- இப்போது இந்த கலவையுடன் கோக்கோ பவுடர் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணிலா essence சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு கப் மைதா மாவை இந்த கலவையுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பை போட்டு கட்டி தட்டாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- பின்பு கால் கப் முந்திரி மற்றும் பாதாமை சிறு துண்டுகளாக்கி இந்த கலவையுடன் சேர்க்கவும்.
- அவனில் வைப்பதற்கு ஒரு tray வை எடுத்து அதன் ஓரங்களில் வெண்ணெய் தடவி நடுவில் பட்டர் பேப்பரை வைத்து இந்த கலவையை அதில் ஊற்றவும்.
- அவனை 350 டிகிரி ஃபாரன்ஹீட் preheat செய்து இந்த tray வை உள்ளே வைத்து அவனை மூடவும். சரியாக இருபது நிமிடங்கள் கழித்து tray வை எடுத்தால் உங்கள் சூடான பிரவுனி ரெடி.