Rose Cookies என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அச்சுமுறுக்கு, தெலுங்கு மொழியில் Gulabi Puvvulu என்றும், மலையாளத்தில் Achapam என்றும் அழைக்கப்படுகிறது. அச்சு முறுக்குகள் கேரளாவை பூர்வீகமாக கொண்டவை. இது ஆங்கிலோ இந்தியர்களின் விருப்பமான பலகாரம். மேலும் தென்னிந்தியாவில் செய்யப்படும் பிரபலமான உணவு வகை. தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் அனைவர் இல்லங்களிலும் கட்டாயமாக இடம் பிடித்திருக்கும் இனிப்பு வகை. கிறிஸ்துமஸ் அன்று ஐரோப்பியர்களின் மாலை நேர சிற்றுண்டியான fruit cakes இடத்தை அச்சுமுறுக்குகள் தென்னிந்தியாவில் பிடித்திருக்கின்றன. இவை சுவையானது மட்டுமல்லாமல் செய்வதற்கு சுலபமான வையும் கூட.
ரோஜா இதழ்கள் வடிவம் கொண்ட அச்சுகளால் செய்யப்படுவதால் அச்சுமுறுக்குகளின் வடிவம் ரோஜாவை போன்றும் அதனின் துளைகள் ரோஜாவின் இதழ்களை போன்றும் உள்ளன. இவ்வாறு வடிவம் கொண்டதால் குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பலகாரமாக அச்சுமுறுக்கு உள்ளது.
அச்சு முறுக்கில் சேர்க்கப்படும் பொருட்கள் சத்துக்கள் நிறைந்தவை. அச்சு முறுக்கில் சேர்க்கப்படும் எள், வெல்லம், மற்றும் தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. கீழே தேவையான பொருட்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
அச்சு முறுக்கு (Rose Cookies)
Ingredients
- 1 கப் பச்சரிசி மாவு
- 1 மேசைக்கரண்டி மைதா
- 3/4 டம்ளர் தேங்காய் பால்
- 3/4 கப் வெல்லம்
- 1 ஏலக்காய் தூள் செய்தது
- எள் சிறிதளவு
- கடலை எண்ணெய் பொரிப்பதற்கு
- உப்பு தேவையான அளவு
Instructions
- அரிசி மாவு, மைதா, உப்பு, ஏலக்காய், எள் இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை தூள் செய்து போடவும். வெல்லம் கரையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
- பின்பு அடுப்பை பற்ற வைக்கவும். வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்தவுடன் வடிகட்டி ஆற வைக்கவும். பின்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- அடுத்து தேங்காய் பால் ஊற்றி கலக்கவும். மாவை தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். என்னை சிறிது சூடானதும் அதில் முறுக்கு அச்சை சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
- சூடான அச்சைஎடுத்து தயார் செய்து வைத்திருக்கும் மாவில் முக்கால் பாகம் அளவிற்கு அச்சுமூழ்குமாறு தோய்த்துகொள்ளவும்.
- முக்கால் பாகத்திற்கு மேல் அச்சைமாவில் இறக்கினால் அச்சை எண்ணெயில் இடும்போது முறுக்கு மாவு எண்ணெயில் இறங்குவதற்கு சிரமமாகஇருக்கும்.
- மாவில் மூழ்கிய அச்சை எண்ணெயில் விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- முறுக்கு பாதி வெந்தவுடன், ஒரு கரண்டியால் முறுக்கை எண்ணெயில் இறக்கிவிடவும். பின்பு முறுக்கை திருப்பி விட்டுஅரை வினாடியில் எடுத்துவிடவும்.
- மறுபடியும் அச்சை முன்பு செய்தது போலவே எண்ணெயில் போட்டு வைக்கவும்.
- ஒவ்வொரு முறையும் முறுக்கு செய்தபிறகு இதேபோன்று அச்சை எண்ணெயில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால்தான் மாவு சுலபமாக அச்சில் ஒட்டும்.
- சுட சுட அறுசுவை அச்சு முறுக்கு தயார். வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.